இந்தியா

பெங்களூருவில் வரலாறு காணாத வெயில்: குடிநீர் தட்டுப்பாடு, மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி

செய்திப்பிரிவு

குளுகுளு நகரமான பெங்களூரு வில் வரலாறு காணாத வெயில் வாட்டி வதைக்கிறது. இதுதவிர, குடிநீர் தட்டுப்பாடும் மின்வெட்டும் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பெங்களூருவில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட சற்று அதிகமாக காணப்பட்ட‌து. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் சராசரியாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.

இந்நிலையில் கடந்த 12-ம் தேதி பெங்களூரு வரலாற்றில் முதல் முறையாக 40.1 டிகிரி செல்சியஸ் என்ற உச்சபட்ச வெப்பநிலையை தொட்டது. இதற்கு முன்பு கடந்த 1931-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி 38.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதே உச்ச‌பட்ச வெப்பநிலை ஆகும்.

85 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை நிலவுவ தால், குழந்தைகள், வயதானவர் கள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் சில தனியார் அலுவ லகங்கள், விடுமுறை வகுப்புகள் செயல்படும் நேரம் மாற்றப் பட்டுள்ளது. கோடை வெயில் ஒருபுறம் கொளுத்தி வரும் நிலை யில், பெங்களூருவில் உள்ள ஏரி, குளங்கள், நதிகள் மட்டுமல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய‌ அணைகளும் வறண்டு காணப்படுகின்றன.

இதனால் பெங்களூருவில் வாரத்தில் மூன்று தினங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகிக்கப் படுகிறது. குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க மலநாடு பகுதியில் பாயும் ஷிரவாதி நதி நீரை பெங்களூருவுக்கு கொண்டுவர கர்நாடக அரசு முடிவெடுத் துள்ளது.

காவிரி, ஹாரங்கி, ஹேமாவதி, துங்கபத்ரா உள்ளிட்ட நதிகளில் நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ள தால், அங்குள்ள‌ நீர்மின் நிலையங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில் பெரும்பாலான இடங்களில் தினசரி 4 முதல் 8 மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறது.

SCROLL FOR NEXT