இந்தியா

அம்பு சின்னத்தால் பெரும் குழப்பம்: ஐஜத.வுக்கு புதிய தேர்தல் சின்னம் தேடும் நிதிஷ்குமார்

ஆர்.ஷபிமுன்னா

பிஹார் முதல்வரான நிதிஷ்குமார் தங்களின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு புதிய தேர்தல் சின்னம் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார். என்றாலும் இறுதி முடிவுக்கு வரமுடியாமல் அவர் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சின்னம் அம்பு ஆகும். இதுபோல் பிராந்திய கட்சிகளான சிவசேனா, சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் சின்ன மாக வில் அம்பு உள்ளது. இந்நிலை யில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் என்று கருதி பலரும் சிவசேனாவின் வில் அம்பு சின்னத்துக்கு தவறுதலாக வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க தங்கள் தேர்தல் சின்னத்தை மாற்ற முதல்வர் நிதிஷ்குமார் முடிவு செய்திருந்தார். இது குறித்து மத்திய தேர்தல் ஆணையத்துக்கும் கட்சி சார்பில் கடந்த ஆண்டு கடிதம் எழுதப்பட்டது. எனினும் அம்பு சின்னத்துக்கு மாற்றாகவும் பொருத்தமாகவும் ஒரு சின்னம் இதுவரை அவர்களுக்கு கிடைக் காமல் உள்ளது.

கடந்த 1988-ல் பல கட்சிகள் இணைந்து ஜனதா தளம் கட்சி உருவானபோது, அதன் சின்னமாக சக்கரம் இருந்தது. பிறகு ஜனதா தளம் உடைந்து விட்டதால் சக்கரம் சின்னம் முடக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனதா தளத்தில் இருந்து உருவான கட்சிகளில் ஒன்றாக ஐக்கிய ஜனதா தளம் இருப்பதால் சக்கரம் சின்னத்தை கேட்கலாம் என்றும் நிதிஷ் குமாருக்கு கட்சியினர் யோசனை அளித்திருந்தனர். ஆனால் சக்கரம் சின்னத்துக்கு ஜனதா தள முன்னாள் தலைவர் எச்.டி.தேவகவுடா பரிந்துரைக்க வேண்டும். இதற்காக அவருக்கு நிதிஷ்குமார் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும் போது, “நிதிஷ்குமாரின் கடிதத் துக்கு தேவகவுடா பதில் அளிப்பது தாமதமாகி வருகிறது. எனவே எங்க ளுக்கு சக்கரம் சின்னம் வழங்க அவர் சம்மதிக்க மாட்டார் என கருது கிறோம். இதற்கு பதிலாக கட்சியில் சிலர் ஆலமரத்தை சின்னமாக்க யோசனை அளித்திருந்தனர். இது எங்களுடன் இணையும் நிலையில் உள்ள சமாஜ்வாதி ஜனதா தளம் கட்சியின் சின்னமாக உள்ளது. ஆனால் ஆலமரத்தை குறிப்பிட்ட மதத்தினர் வணங்கி வருவதால் இது பொருத்தமாக இருக்காது. எனவே டிராக்டர் வாகனத்தை சின்னமாக்கலாமா என யோசித்து வருகிறோம். இதையும் பலர் ஏற்கத் தயங்குகின்றனர்” என்று தெரிவித்தனர்.

ஐக்கிய ஜனதா தளம் முன்னதாக சமதா கட்சி என்ற பெயரில் இருந்த போது, எரியும் ஜுவாலை சின்னமாக இருந்தது. ஆனால் அது ஒரு அமங்கலச் சின்னமாக இருப்பதாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் மறுத்துள்ளனர். மேற்கு உ.பி.யில் அதிகம் வசிக்கும் ஜாட் சமூகத் தினரின் ஆதரவு பெற்ற கட்சியாக ராஷ்ட்ரிய லோக் தளம் உள்ளது. இதன் தலைவரான அஜீத்சிங் தங்கள் கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைக்க உள்ளார். இதனால் இவரது கட்சியின் கை பம்பு சின்னத்தை பயன்படுத்தலாமா எனவும் ஆலோசிக்கப்பட்டது. சின்னம் எதுவாக இருந்தாலும் அது மக்களை கவருவதாக இருக்க வேண்டும் என்பது இக்கட்சியின் புதிய தேசிய தலைவரான நிதிஷின் கருத்து. எனவே குடிசையை சின்னமாக ஏற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT