இந்தியா

அதிக விளைச்சலால் வெங்காயம் விலை உயராது

ஆர்.ஷபிமுன்னா

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நேரங்களில் வெங்காய விலை உயர்வு அரசியல் பிரச்சினையாகி மாநில அரசுகளை காவு கேட்டதுண்டு.

இந்த ஆண்டு வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் அதன் விலை உயர வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது.

டெல்லியின் மொத்த வியாபார சந்தையான ஆசாத்பூர் மண்டியில் வெங்காயம் 1 கிலோ ரூ.5 என்ற விலையில் விற்கப்படுகிறது. இதையே சில்லறை வியாபாரிகள் கிலோ ரூ. 18 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்கின்றனர். ஆசாத்பூர் மண்டிக்கு வெங்காய வரத்து தற்போது அதிகரித்து விட்டதே, விலை குறைந்ததற்கு காரணம். இங்கு வழக்கமாக தினமும் சுமார் 25 லாரிகளில் வந்து கொண்டிருந்த வெங்காயம் தற்போது 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் வருகிறது. இதில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து வரும் நீமச் என்ற வகை வெங்காயம் கிலோ ரூ. 2-க்கு விற்கப்படுகிறது. தரம் குறைந்த வகை வெங்காயம் வெறும் 35 பைசாவுக்கு ஆசாத்பூர் மண்டியில் கிடைக்கிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஆசாத்பூர் மொத்த வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் ராஜேந்தர் சஹானி கூறும்போது, “இந்த ஆண்டு நாடு முழுவதிலும் வெங்காய விளைச்சல் அதிகரித்துள் ளது. இதனால் அடுத்த ஆண்டு வரை வெங்காயம் விலை உயர வாய்ப்பில்லை. இது விவசாயி களுக்கோ அதிக நஷ்டத்தை அளித் துள்ளது. விவசாயிகளுக்கு 1 கிலோ வெங்காயம் பயிர் செய்வதற்கான செலவு மட்டும் ரூ.12 ஆக உள்ளது” என்றார்.

ஆசாத்பூர் மண்டியில் வெங்காய வரத்து அதிகமாக உள்ளது. வழக்க மாக எழும் வெங்காய விலை உயர்வு புகாரில் இருந்து மத்திய அரசுக்கு தப்பிக்க இது உதவியுள்ளது.

டெல்லியில் கடந்த 2014-ல் சட்டப் பேரவை தேர்தலுக்கு முன் குடியரசுத் தலைவர் ஆட்சி நிலவியபோது, வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100-ஐ தொட்டது. இதை சமாளிக்க 200 முக்கிய இடங்களில் வேன்களில் வைத்து வெங்காயம் விற்க துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உத்தரவிட்டிருந்தார். இதற்கு முன் 2008-ல் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் வெங்காயத்தின் விலை ரூ.100 வரை உயர்ந்தது. வெங்காயத்தை கோர்த்து மாலையாக அணிந்து எதிர்க்கட்சிகள் அப்போது தீவிரப் பிரச்சாரம் செய்தன. அப்போது ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு வேன்களில் வெங்காயம் விற்பனை செய்தது.

SCROLL FOR NEXT