கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதார் மசோதா நிறைவேற்றப்பட்டது. நிதி மசோதாவாக குறிப்பிட்டு இதனை தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக தாக்கல் செய்யும்போது, அதனை மாநிலங்களவையில் நிராகரிக்க முடியாது. மக்களவையில் நிறைவேற்றினால் போதும். நிதி மசோதா தொடர்பாக மாநிலங்களவை பரிந்துரைகளை மட்டுமே அளிக்க முடியும். எப்படி இருப்பினும் மக்களவை சபாநாயகரின் முடிவே இறுதியானது. மக்களவையில் நிதி மசோதா மாநிலங்களவையின் பரிந்துரையுடனோ, அல்லது இல்லாமலோ நிறைவேற்றப்பட்டு விட்டால், அது இரு அவைகளிலும் நிறைவேறியதாகவே கருதப்படும். எனவே, பாஜக அரசு ஆதாரை, நிதி மசோதாவாகக் கொண்டு வந்து நிறைவேற்றியது.
இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. நிதி மசோதாவாக தாக்கல் செய்ததன் மூலம் மாநிலங்களவையை அரசு அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டியது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம் என காங்கிரஸ் தெரிவித்தது. நிதி மசோதாவாக ஆதார் கொண்டு வரப்பட்டதை விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவையை சவப்பெட்டியில் வைத்து ஆணி அடித்ததற்குச் சமம் எனக் குறிப்பிட்டிருந்தார்.