இந்தியா

டெல்லி அதிவேக கார் விபத்து: இளைஞர் மீது 304-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு

பிடிஐ

டெல்லியில் இளைஞர் ஒருவர் தனது மெர்சிடீஸ் காரை அதிவேகமாக ஓட்டியதில் ஒருவர் பலியான சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது இந்திய தண்டனை சட்டம் கொலை அல்லாத மரணம் விளைவிக்கும் குற்றப்பிரிவு 304-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமையன்று டெல்லி சிவில் லேன்ஸ் பகுதியில் லட்லோ கேஸ்டில் பள்ளி அருகே சித்தார்த் சர்மா என்பவர் சாலையைக் கடக்க முயன்றபோது வேகமாக வந்த மெர்சிடீஸ் கார் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில், சர்மா 15 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு இறந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது.

இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் மீது 304-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி (வடக்கு) போலீஸ் கமிஷனர் மதுர் வர்மா கூறும்போது, "சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் காரை அதி வேகமாக இயக்கியது தெரியவந்தது. குடியிருப்புப் பகுதியில் அவ்வளவு வேகமாக காரை இயக்கினால் நிச்சயம் விபத்து ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை.

மேலும், அந்த இளைஞர் மீது ஏற்கெனவே விபத்து வழக்கு இருக்கிறது. அப்போதும் அதிவேகமாக காரை இயக்கியதால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் அதிவேகமாக காரை ஓட்டியதற்காக இரண்டு முறை போக்குவரத்து காவல்துறையில் அவர் அபராதம் செலுத்தியிருக்கிறார். அதேபோல், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நோ பார்க்கிங் பகுதியில் வாகனத்தை நிறுத்தியதற்காக அபராதம் செலுத்தியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, சித்தார்த் சர்மா விபத்தில் பலியான சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது கொலை அல்லாத மரணம் விளைவிக்கும் குற்றப்பிரிவு இபிகோ 304-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டது" என்றார்.

17 ஆண்டுகளுக்கு முன்னர் சஞ்சீவ் நந்தா பி.எம்.டபிள்யு கார் விபத்து வழக்கில் இந்த சட்டப்பிரிவின் கீழ் டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின் தற்போதுதான் சாலை விபத்தில் இந்த பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) சம்பந்தப்பட்ட இளைஞரின் தந்தை கைது செய்யப்பட்டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT