இந்தியா

இந்தியாவிலிருந்து மனிதாபிமான உதவி: ஆப்கனுக்கு 2,500 டன் கோதுமை சப்ளை

செய்திப்பிரிவு

உணவு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் 50 ஆயிரம் டன் கோதுமையை அனுப்ப முடிவு செய்துள்ளது. இதன்படி இந்தியாவிலிருந்து லாரிகள் மூலம் அனுப்பப்பட்ட 2,500 டன் கோதுமை ஆப்கனிஸ்தானை சென்றடைந்தது. ஆப்கனிஸ்தானின் ஜலாலாபாத் நகரை சனிக்கிழமை லாரிகள் சென்றடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உணவு தானிய லாரிகள் பிப்ரவரி 22-ம் தேதி இந்தியாவிலிருந்து புறப்பட்டன. மொத்தம் அனுப்புவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 50 ஆயிரம் டன் உணவு தானியங்களில் இது முதல் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் பரித் மமுன்ட்ஸே முதலாவது தொகுப்பு உணவு தானியங்கள் அடங்கிய 50 லாரிகளை வரவேற்றார். உலக உணவு திட்டத்தின் கீழ் (டபிள்யூஎப்பி) இந்த உணவு தானியங்கள் அங்குள்ள மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்ளே, ஆப்கன் தூதர் மமுன்ட்ஸே, உலக உணவு திட்ட இயக்குநர் பிஷா பர்ஜுலி ஆகியோர் முன்னிலையில் அமிருதசரஸின் அட்டாரி எல்லை பகுதியிலிருந்து இந்த லாரிகள் ஆப்கனுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டன.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாகிஸ்தான் வழியாக ஆப்கனுக்கு உணவுப் பொருள்களை அனுப்ப அனுமதிக்குமாறு பரிந்துரைக் கடிதத்தை பாகிஸ்தானுக்கு இந்திய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. இக்கடிதத்துக்கு நவம்பர் 24-ம் தேதி ஒப்புதல் அளித்து பாகிஸ்தான் தரப்பிலிருந்து பதில் கடிதம் இந்திய அரசுக்குக் கிடைத்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை ஏற்று ஆப்கனில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக தவிக்கும் மக்களுக்கு உதவ இந்திய அரசு ஒப்புக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்த உணவு தானியங்கள் நன்கொடையாக வழங்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இது தவிர கரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்ஸின் 15 லட்சம் குப்பிகள் மற்றும் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள் 13 டன் ஆகியவற்றையும் ஆப்கனுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT