இந்தியா

விசாகப்பட்டினம் பயோ-டீசல் ஆலையில் பெரும் தீ விபத்து

சுமித் பட்டாசாரி

விசாகப்பட்டினத்தில் துவாடா எனும் இடத்தில் உள்ள பயோடீசல் உற்பத்தி செய்யும் பயோமேக்ஸ் பியூவல்ஸ் லிமிடட் ஆலையில் நேற்றிரவு (செவ்வாய் இரவு) தீப்பிடித்தது.

தீ விபத்து ஏற்பட்டபோது ஆலையில் 10 முதல் 15 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் அனைவரும் தீ விபத்து ஏற்பட்டவுடன் தப்பி ஓடியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த மாநிலக் கல்வி அமைச்சர் கண்ட ஸ்ரீநிவாசா, உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

விபத்து குறித்து மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி மோகன் ராவ் கூறும்போது, "ஆலையில் 15 எரிபொருள் தேக்கும் டாங்குகள் இருக்கின்றன. அவற்றில் 11 டாங்குகளில் தீப்பற்றியுள்ளது.

10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ரசாயன நுரை மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.

கடந்த 1997-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் எச்.பி.சி.எல். ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேர் பலியாகினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக தற்போதைய விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடந்த 2012-ம் ஆண்டு முதல் ரசாயனம் மற்றும் மருந்து நிறுவனங்களில் தீ விபத்து அதிகரித்துள்ளது. 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை 30 விபத்துகள் நடந்துள்ளன.

SCROLL FOR NEXT