டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது நேற்று இளைஞர் ஒருவர் திடீரென காலணியை வீசினார். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
டெல்லியில் ஒற்றைப் படை எண் கார்கள் மற்றும் இரட்டைப் படை எண் கார்களை ஒருநாள் விட்டு ஒருநாள் அனுமதிக்கும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது. அந்த திட்டம் ஏப்ரல் 15-ம் தேதி மீண்டும் 15 நாட்களுக்கு அமல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து டெல்லி தலைமைச் செயலகத்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து ஒருவர் திடீரென கேஜ்ரிவால் மீது காலணி வீசினார். ஆனால் அது அவர் மீது படவில்லை. சற்று தொலைவில் சென்று விழுந்தது.
பதற்றம் அடைந்த போலீஸார் அந்த இளைஞரை உடனடியாக சுற்றிவளைத்தனர். அவர் ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தியாளர்கள் உருவாக்கி யுள்ள ஆம் ஆத்மி சேனாவை சேர்ந்த வேதபிரகாஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை போலீஸார் கைது செய்து வெளியே அழைத்துச் சென்றனர். அதன் பிறகு கேஜ்ரிவால் தொடர்ந்து பேட்டி அளித்தார்.
டெல்லியில் சிஎன்ஜி வாயு விநியோகத்தில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதபிரகாஷ் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கு முன், கேஜ்ரிவால் மீது மை வீசிய சம்பவமும் நடந்தது. கடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது இளைஞர் ஒருவர் கேஜ்ரிவால் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.