ஐ.பி.எல். போட்டிகளை மகாராஷ்டிரத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான மும்பை கிரிக்கெட் சங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
முதலில், சில நிபந்தனைகளுடன் ஐபிஎல் போட்டிகளை மகாராஷ்டிராவில் அனுமதிப்பது தொடர்பாக சில கேள்விகளை தலைமை நீதிபதி முன்வைத்தார்.
ஆனால், அமர்வில் இருந்த மற்ற இரு நீதிபதிகள் ஆர்.பானுமதியுடன், யு.யு.லலித்தும் ஐபிஎல் போட்டிகளை மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வேறு ஒரு மாநிலத்துக்கு நிச்சயமாக மாற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
மகாராஷ்டிராவில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக ஏராளமான நீர் வீணாக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வறட்சி காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை மகாராஷ்டிராவில் நடத்தக் கூடாது என்று கூறி 'லோக்சத்தா இயக்கம்' என்ற பொதுநல அமைப்பு மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது.
மகாராஷ்டிர மாநிலம் வறட்சியின் பிடியில் இருக்கும்போது ஐபிஎல் போட்டியை நடத்தும் மைதானங்களுக்காக 60 லட்சம் லிட்டர் நீர் செலவிடப்படுவதாக இந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏப்ரல் 30-ம் தேதிக்கு பிறகு மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது. மே மாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்றவேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மும்பை கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
வறட்சி காலத்தில் கிரிக்கெட் போட்டிகளை மகாராஷ்டிராவில் நடத்துவது சரியானது கிடையாது என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.