தெலங்கானா மாநிலம், மேடா ரம் கிராமத்தில் சுமார் 100 ஆண்டு களுக்கும் மேலாக அப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் சம்மக்கா - சாரக்கா என்ற இருவரை வன தேவதைகளாக பூஜித்து வருகின்றனர். இவர்களுக்காக ஆண்டுதோறும் பிரம்மாண்ட விழா நடத்துகின்றனர். இதில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மக்கள் லட்சக்கணக்கில் பங்கேற்கின்றனர். தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை ‘சம்மக்கா-சாரக்கா ஜாத்திரை’ என அழைக்கின்றனர்.
கடந்த 16-ம் தேதி தொடங்கிய இவ்விழாவில் கரோனா நிபந்தனைகள் இருந்தாலும், கடந்த 4 நாட்களில் 1 கோடியே 35 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாக மாநில பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தயாகர் ராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று பேசும்போது, “இந்த விழாவில் 1200 அரசு அதிகாரிகள் பணியாற்றினர். 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். 900 மருத்துவத் துறையினரும் 4 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டனர். குடிநீர், போக்குவரத்து உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டன. இந்த ஆண்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி” என்றார்.
விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பங்கேற்று, அம்மனுக்கு ஆளுயர வெல்லம் காணிக்கையாக வழங்கினார்.