மத்திய கிராம வளர்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டேவின் வாகனம் மீது இடித்த கார் சிவப்பு விளக்கில் நிற்காமல் போனதே விபத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. இதற்காக, அந்தக் காரின் ஓட்டுநர் குர்விந்தர் சிங் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
டெல்லியிலிருந்து மகராஷ்டிராவின் பீட் தொகுதியில் செவ்வாய்கிழமை நடைபெற இருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, மும்பை செல்ல வேண்டி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் கிளம்பினார் கோபிநாத் முண்டே.
லோதி சாலையில் உள்ள தனது அரசு வீட்டிலிருந்து தனது சிவப்பு விளக்கு பொருத்திய மாருதி எஸ்டீமின் ’எஸ்.எக்ஸ்.4’ வகை டிஎல் 8சி பிஎப் 0034 எண்ணுள்ள காரில் கிளம்பினார். அதில், ஓட்டுநரின் அருகில் அவரது பாதுகாப்பு அதிகாரி அமர்ந்து கொண்டிருக்க, முண்டே பின்புற சீட்டில் அன்றைய நாளிதழ் படித்தபடி பயணம் செய்தனர். இந்த கார் லோதி சாலையில் உள்ள அரபிந்தோ சவுக்கின் சிக்னலை தாண்டியபோது இடதுபுறம் பிரித்விராஜ் சாலையிலிருந்து வந்த ஒரு டாடா இண்டிகா கார் திடீர் என அம்பாசிட்டரில் ஒருபக்கமாக மோதியது. இதனால் காரின் பின்புறம் தனியாக அமர்ந்திருந்த முண்டே நிலைதடுமாறிக் கிழே விழுந்திருக்கிறார்.
இதனால் அவரது தலையில் பலத்த காயம்பட்டிருக்கிறது. அவரது பாதுகாப்பு அதிகாரி நாயரும் ஓட்டுநரும் சேர்ந்து முண்டேவைப் பிடித்து அமர வைத்தபோது அருந்த நீர் கேட்டிருக்கிறார். பிறகு, தன்னை விரைந்து மருத்துவமனை அழைத்து செல்லுமாறும் கோரியிருக்கிறார். இதன் வழியில்தான் அவரது உயிர் பிரிந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
முண்டேவின் கார் மீது வேகமாக வந்து இடித்த டாடா இண்டிகாவில் டிரைவர் மட்டுமே இருந்திருக்கிறார். அரபிந்தோ மார்க் சாலை வழியாக வந்த அந்த டாடா இண்டிகா சிவப்பு விளக்கை கடந்துவிட வேண்டும் என மிக வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. சிகப்பு விளக்கு எரிந்த பின்பும் டாடா இண்டிகா கார் சிக்னலைக் கடந்தது விபத்துக்குக் காரணமாகி விட்டது. இதனால் அந்த கார் டிரைவர் குர்விந்தர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த விபத்தில் டாடா இண்டிகாவின் முன்பகுதியின் மேற்புறம் நசுங்கி விட்டது. முண்டேவின் காருக்கு இடதுபுறம் கதவின் மேற்பகுதி லேசாக நசுங்கி விட்டது. நடந்த விபத்து சிறிது எனினும், அதன் தாக்கம் அமைச்சர் முண்டேவின் உயிரை பலி வாங்கி விட்டது. இவருடன் பயணம் செய்த ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியான நாயருக்கு ஒரு காயமும் படவில்லை. அதேபோல் முண்டேவிற்கும் தலை தவிர வேறு எங்கும் காயம் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
இதற்கு அவர்கள் இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்தது ஒரு முக்கியக் காரணம். ஆனால், பின்புறம் அதுபோன்ற வசதி இல்லாததால் அமைச்சருக்கு கார் இடித்த அதிர்ச்சியில் கிழே விழ வேண்டியதாயிற்று. விபத்திற்கு பின் முண்டேவின் காரிலேயே அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
இதுபற்றி எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்து சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர்.அமித் குப்தா கூறுகையில், ‘அமைச்சரை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, நாடித்துடிப்பும் இதயமும் செயல்படாத நிலையில் இருந்தது. எனவே, அவருக்கு உடனடியாக இதயம் செயல்பட வைப்பதற்கான சிகிச்சை சுமார் 15 நிமிடங்கள் அளிக்கப்பட்டும் பலன் கிடைக்கவில்லை’ எனத் தெரிவித்தார்.
விபத்து நடந்தவுடன் அமைச்சரின் கார் மீது மோதிய டாடா இண்டிகாவின் ஓட்டுநர் குருவீந்தர் சிங் கைது செய்யப்பட்டார். அவரது காரையும் போலீசார் கைப்பற்றி துக்ளக் சாலை காவல் நிலையம் கொண்டு வந்தனர். இந்த கார் குருவீந்தருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.
மிகவும் சிறிய அளவில் நடந்த விபத்து ஒரு உயிரை பலி வாங்கும் அளவிற்கு இல்லை எனக் கருதப்படுகிறது. எனினும், நடந்த விபத்தை ‘சதி’ எனும் கோணத்திலும் போலீசார் விசாரணை செய்தனர். ஆனால் விசாரணையில் அப்படி எதுவும் இல்லை என்பது தெளிவாகி இருப்பதாகக் கருதப்படுகிறது.
இதன் பிறகு டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள டெல்லி நீதிமன்றத்தில் குர்விந்தர் சிங் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
திகிலூட்டும் 'மூன்று'
மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் திடீர் மரணம் அரசியல் வட்டாரத்தில் பலத்த சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. இந்த விபத்தில் சதி எதாவது இருக்கக்கூடும் என்று பா.ஜ.க. தலைவர்கள் உள்பட பலர் சமூக வலைத்தளங்களில் சந்தேகத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
"காலைஆறு மணிக்கு எப்படி விபத்து நடக்கும்? அப்போது அவருடைய பாதுகாப்புப் பணியில் யாரும் இல்லையா?" என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ஒருவர். "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்திருப்பதில் ஏதோ சதி இருக்கிறது" என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஆதூத் வாக்.
கோபிநாத் முண்டேவும் அவரது உறவினரும் பா.ஜ.க. முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்த பிரமோத் மகாஜனும் இறந்த விதத்தில் மட்டும் மர்மம் இல்லை, அவர்கள் இருவருமே 3-ந் தேதி இறந்திருக்கிறார்கள் என்பது குடும்ப வட்டாரங்களைத் தாண்டி அரசியல் வட்டாரங்களிலும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.
பா.ஜ.க.வின் நம்பிக்கை நட்சத்திரங்களுள் ஒருவராக திகழ்ந்த பிரமோத் மகாஜன் 2006-ம் வருடம் மே மாதம் 3-ம் தேதி இறந்தார். குடும்பத் தகராறில் அவரது சொந்த சகோதரர் பிரவீன் மகாஜனால் சுடப்பட்ட பிரமோத், 13 நாட்கள் மருத்துவமனையில் கழித்த பிறகு இறந்தார். பிரமோத் மகாஜனுக்குப் பிறகு அவரது தங்கையை மணந்திருக்கும் கோபிநாத் முண்டேவிற்கு பா.ஜ.க.வில் முக்கியத்துவம் கிடைத்தது. அவரும் 3-ந் தேதி அன்று இறந்திருப்பது, அவர்களது குடும்பத்திற்கே 3-ந் தேதி ராசியில்லாத தேதியாக இருக்குமோ என்கிற சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
இவர்கள் மட்டுமல்ல, பிரமோத் மகாஜனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த விவேக் மொய்திரா 2006-ம் வருடமே ஜூன் 3 அன்று இறந்தார். பிரமோத் மகாஜனை சுட்டுக்கொன்ற பிரவீன் மகாஜன் 2010-ல் இறந்தார். அவர் இறந்த தேதி - மார்ச் 3.