திருப்பதி: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் நாயுடுவின் சொந்த ஊர் நாராவாரி பள்ளியாகும். இந்த கிராமம், திருப்பதி அடுத்துள்ள சந்திரகிரி மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான வீடு, விவசாய நிலங்கள் உள்ளன.
ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இங்கு வந்து செல்வது வழக்கம்.
கடந்த 1989-ம் ஆண்டில், சந்திரபாபு நாயுடுவின் தந்தையான கஜ்ஜூர் நாயுடு அந்த கிராமத்தில் 87 செண்ட் விவசாய நிலத்தை வாங்கினார். அவரது மறைவுக்கு பின்னர் அந்த நிலம் சந்திரபாபு நாயுடு பெயருக்கு மாற்றப்பட்டது. பின்னர், அந்த ஊரில் மருத்துவமனை மற்றும் திருமண மண்டபம் கட்ட இதில் 40 செண்ட் நிலத்தை அரசுக்கு வழங்கினார் சந்திரபாபு நாயுடு.
அங்கு மீதம் 37 செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சமீபத்தில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து, அதில் கருங்கற்கள் நட்டு, இரும்பு வேலியும் போட்டுள்ளனர். தகவல் அறிந்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சிலர் சென்று விசாரித்தனர். விரைவில் இது குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஆந்திராவில் முன்னாள் முதல்வரின் நிலத்துக்கே பாதுகாப்பு இல்லை எனில் சாதாரண மக்களின் நிலை என்ன ? என தெலுங்கு தேசம் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.