இந்தியா

பிஹார் அரசு நடவடிக்கை: கோயில் நில உரிமையாளராக : பூசாரிக்கு பதில் கடவுள் பெயர்

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சட்டத்துறை அமைச்சர் பிரமோத் குமார் கூறியதாவது: கோயில் நிலங்கள் தொடர்பாக முறைகேடுகள் நடக்கின்றன. பல கோயில்களின் நிலங்கள் பூசாரிகளின் பெயர்களில் உள்ளன. அவற்றின் உரிமையாளர்களாக பூசாரிகள் நிலங்களை வாங்கி விற்பதால் முறைகேடுகள் நடக்கின்றன. முறைகேடுகளைத் தடுக்க பூசாரிகளுக்கு பதில் கடவுள்களை கோயில் நிலங்களின் உரிமையாளர்களாக மாற்றும் நடைமுறையை பிஹார் அரசு தொடங்கி உள்ளது. வருவாய் ஆவணங்களில் இருந்து கோயில் நிலங்களின் உரிமையாளர்களாக இருக்கும் பூசாரிகளின் பெயர்கள் நீக்கப்பட்டு அந்த கோயிலின் கடவுள்களையே உரிமையாளர் என்று குறிப்பிடப்படும்.

கோயில் நிலங்களின் உரிமையாளர்களாக பூசாரிகளை கருத முடியாது. இது தொடர்பாக மாநில சட்ட அமைச்சகம் விரைவில் சுற்றறிக்கை வெளியிடும். கோயில் நிலங்களின் முறைகேடுகளைத் தடுக்க இந்த நடவடிக்கை உதவும். பூசாரிகள், மடாதிபதிகள் கோயில் நிலங்களைவிற்பனை செய்திருந்தால் அதைக் கண்டறிந்து பத்திரப்பதிவை ரத்து செய்ய வருவாய்த் துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை பிஹாரில் சமூக அரசியல் ரீதியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். கோயில் நிலங்களின் உரிமை யாளர்கள் பூசாரிகள் அல்ல, கடவுள்தான் உரிமையாளர் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல் படுத்துகிறோம். இவ்வாறு பிர மோத் குமார் கூறினார். -பிடிஐ

SCROLL FOR NEXT