ஜம்மு-காஷ்மீர் முதல்வராக ஏப்ரல் 4-ல் மெஹபூபா பதவியேற்கிறார். பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியே காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு விழா குறித்து பிடிபி (மக்கள் ஜனநாயகக் கட்சியின்) மூத்தத் தலைவர் அமிதாப் மட்டூ ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மெகபூபா முப்தி சாய்பா ஏப்ரல் 4-ல் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக பதவியேற்கிறார். மெகபூபா ஆட்சியில் மாநிலத்தில் அமைதி நிலைநாட்டப்படும் வளம் பெருகும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
காலதாமதம் ஏன்?
பாஜக - பிடிபி கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததையடுத்து கடந்த 24–ம் தேதி ஸ்ரீநகரில் மெகபூபாவின் இல்லத்தில் பிடிபி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூடி, அவரை முறைப்படி சட்டசபை கட்சித் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர்.
26-ம் தேதி ஆளுநரிடம் ஆட்சியமைக்க அதிகாரம் கோரி இரண்டு கட்சிகளும் முறைப்படி கடிதம் வழங்கின.
இருப்பினும் ஒரு வாரத்துக்கு பின்னரே பதவியேற்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கூட்டணி கட்சிகளும் ஏதாவது விரிசலா என சந்தேகம் எழுப்பப்பட்டது.
ஆனால், இதனை அமிதாப் மட்டூ திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாஜக - பிடிபி கூட்டணி உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.