இந்தியா

கர்நாடகாவில் ஹிஜாப் வழக்கு: விசாரணையை நேரலையாக பார்க்கும் 5 லட்சம் பேர்

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடையை எதிர்த்து உடுப்பி முஸ்லிம் மாணவிகள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவ்வழக்கு 5-வது நாளாக நேற்று தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

முஸ்லிம் மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் தேவதத் காமத், ரவிவர்ம குமார் ஆகியோர் வாதத்தை நிறைவு செய்தனர். இதற்கு பதிலளிக்க அவகாசம் வழங்குமாறு அரசு வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கி கோரினார். இதையடுத்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடக உயர் நீதிமன்ற விசாரணையை கடந்த 5 நாட்களாக ஒரு லட்சத்தில் இருந்து 5 லட்சம் பேர் வரை நேரலையில் பார்க்கிறார்கள் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஹுப்ளியை சேர்ந்த மருத்துவர் அப்துல் மெஹரிக் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,“ரம்ஜான் நோன்பு காலத்திலும், வெள்ளிக்கிழமைகளிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டும் என திருக்குரானில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மத நம்பிக்கையை மதிக்கும் வகையில் அந்த காலக்கட்டத்தில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும்'' என்று கோரியுள்ளார்.

SCROLL FOR NEXT