இந்தியா

ராஜஸ்தான் அதிர்ச்சி: விலங்கு மருந்தை 400 நோயாளிகளுக்குச் செலுத்திய அரசு மருத்துவமனை

செய்திப்பிரிவு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் விலங்குகளுக்கு செலுத்தும் ஊசி மருந்தை நோயாளிகளுக்குச் செலுத்தியது அம்பலமாகியுள்ளது.

சுமார் 400 பேருக்கு இந்த விலங்கு ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது, இந்திய மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

'மெரோபீனம்' என்ற அந்த ஊசி மருந்து விலங்குகளுக்குரியது. கொடுமை என்னவெனில், அரசின் இலவச மருந்துத் திட்டத்தின் கீழ் இந்த மருந்தை அரசு மருத்துவமனை வாங்கியுள்ளது.

விலங்குகளுக்குக் கொடுக்கும் மருந்தை மனிதர்களுக்கு ஊசி மூலம் ஏற்றுவது என்றால், எந்த மருந்து எதற்குக் கொடுப்பது, யாருக்குக் கொடுப்பது என்ற தகவல்களைக் கூட அறியாத ஊழியர்களா அங்கு பணியாற்றி வருகின்றனர் என்று பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

நல்லவேளையாக இதுவரை பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டாலும், நீண்டகால பக்க விளைவுகளுக்கு அரசு மருத்துவமனை பொறுப்பேற்குமா என்று அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்துள்ளனர்.

மெரோபீனம் என்ற இந்த மருந்து ஒரு ஆன்ட்டிபயாடிக் ஆகும். கிட்னி, நுரையீரல் தொற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்தாகும். இது விலங்குகளுக்குரியது.

இந்த விவகாரம் குறித்து ராஜஸ்தான் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இன்னும் எத்தனை மருத்துவமனைகளில் இந்த மருந்து நோயாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை இன்னும் ஒரு வாரத்திற்குள் சமரிப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

1000 மெரோபீனம் ஊசி மருந்து வினியோகிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதில் 400 ஊசி மருந்துகள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.

சுமார் 8 மணி நேரத்திற்குள் இதன் பக்க விளைவுகள் தெரிந்துவிடுமாம். அவ்வாறு இல்லையெனில் ஆபத்தில்லை என்று அதிகாரிகள் சப்பைக் கட்டுகின்றனர்.

SCROLL FOR NEXT