ஆந்திர மாநிலத்தில், எதிர்க் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்துள்ளனர். மேலும் 7 எம்எல்ஏக்கள் இணைய உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கட்சி தாவிய எம்எல்ஏக்களின் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தி வருகிறார்.
இது குறித்து ஏற்கனவே மாநில ஆளுநர் நரசிம்மனிடம் புகார் அளித்தார் ஜெகன்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க நேற்று ஜெகன் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இதில் ரோஜா உட்பட முக்கிய கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் இருந்தனர். இவர்கள் சென்ற சில நிமிடங்களிலேயே விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் விமானம் தரை இறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வேறு விமானம் மூலம் அனைவரும் டெல்லி சென்றனர்.