இந்தியா

குரு ரவிதாஸ் ஜெயந்தி: டெல்லி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்; பக்தர்களுடன் கீர்த்தனையில் பங்கேற்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இலக்கிய கவிஞர் குரு ரவிதாஸின் பிறந்தநாளை ஒட்டி டெல்லி கரோல்பாகில் உள்ள ரவிதாஸ் கோயிலில் பிரதமர் நரேந்திர் மோடி தரிசனம் செய்தார்.

குரு ரவிதாஸ் திரு உருவச்சிலைக்கு அவர் தீப ஆராதனை காட்டி பூஜைகள் செய்தார். பின்னர் அங்கிருந்த பக்தர்களுடன் அமர்ந்து, அவர்கள் பாட்டுப்பாட அதற்கேற்ப இசைக்கருவி ஒன்றை இசைத்து கீர்த்தனையில் ஆர்வமுடன் பங்கேற்றார்.

பிரதமர் மோடி தனது தலையில் துணி ஒன்றையும் கட்டியிருந்தார். ரவிதாஸ் ஏற்படுத்திய ரவிதாஸியா என்ற பக்தி மார்க்கத்தைப் பின்பற்றுவோர் இவ்வகை துணியை தலையில் அணிவதுண்டு. இன்று ரவிதாஸ் கோயிலுக்கு வந்த அவர் ரவிதாஸியா மார்க்கத்தைப் பின்பற்றுவோருடன் ஒன்றுபட்டு நிற்கும் அடையாளமாக தனது தலையில் அந்தத் துண்டை கட்டி வந்தார்.

கோயிலில் இருந்து செல்லும்போது அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில், குரு ரவிதாஸின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஓர் ஊக்கம் என்று பதிவிட்டார்.

யார் இந்த குரு ரவிதாஸ்? உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 1377ல் பிறந்தவர். அவரது பிறந்தநாள் எதுவென்று குறிப்பாக தெரியாவிட்டாலும் ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமி நாள் அவரது பிறந்ததினமாக கொண்டாடப்படுகிறது.
குரு ரவிதாஸ் பக்தி இலக்கியங்களைப் படைத்தார். அவரது பாடல்கள் குரு கிராந்த் சாஹிப் எனப்படும் சீக்கியர்களின் புனித நூலில் கூட இடம்பெற்றுள்ளது.

அவர் தனது பாடல்களில் சமத்துவத்தை போதித்தார். சாதி வேறுபாடின்றி மனிதர்கள் அனைவரும் மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்றார். பாலின சமத்துவத்தைப் போதித்தார்.

வாரணாசியில், குரு ரவிதாஸ் நினைவாக ஸ்ரீ குரு ரவிதான் ஜனம் அஸ்தன் மந்திர் என்ற புனித தலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறு மாசி பவுர்ணமியின் போது அவரது பக்தர்கள் கங்கையில் புனித நீராடுவது வழக்கம்.

"ஒவ்வொரு மனிதருக்குள் கடவுள் இருக்கிறார். ஆகையால் மனிதரை சாதி, மதம், பிற சமூக கட்டமைப்புகளால் பிரிவினை செய்வது பலனற்றது" என்பதே ரவிதாஸின் கோட்பாடு.

குரு ரவிதான் தான் மீரா பாயின், ஆன்மிக குரு என்போரும் உண்டு.

இதற்கிடையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், அவரது சகோதரர் ராகுல் காதியும் வாரணாசியில் உள்ள ரவிதாஸ் கோயிலில் தரிசனம் செய்யவுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. அடுத்தக்கட்ட தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் வாரணாசியில் பிறந்த பக்தி இலக்கிய கவிஞர் ரவிதாஸ் ஜெயந்தியை பிரதமர் மோடி தொடங்கி அனைத்து அரசியல் கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT