இந்தியா

விவசாயிகளுக்கு மின்கட்டணம் இல்லை; உ.பி.யில் இலவச காஸ் சிலிண்டருடன் மக்கள் ஹோலி கொண்டாடலாம்: மத்திய அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம்

செய்திப்பிரிவு

பாஜகவுக்கு வாக்களித்து இலவச காஸ் சிலிண்டருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடுங்கள் என்று உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார். விவசாயிகள் அடுத்த 5 ஆண்டுக்கு மின்கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

உத்தரப்பிரதேச சட்டப்பேர வைத் தேர்தலை முன்னிட்டு மெயின்புரி என்ற இடத்தில் பாஜகவை ஆதரித்து நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஹோலி பண்டிகைக்குள் அனைவருக்கும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியான 8 நாட்களுக்குள் இலவசமாக காஸ் சிலிண்டர் வழங்கப்படும். பாஜகவுக்கு மக்கள் வாக்களித்து இலவச காஸ் சிலிண்டருடன் ஹோலி பண்டிகையை கொண்டாட வேண்டும். விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு விவசாயிகள் மின்கட்டணம் செலுத்த வேண்டாம்.

சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவர் அசம்கான் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் சிலர் கிரிமினல் குற்றங்களுக்காக இப்போது சிறையில் உள்ளனர். சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடுவார்கள். அகிலேஷ் மீண்டும் ஆட்சி அமைத்தால் கிரிமினல் குற்றங்களுக்காக சிறையில் உள்ளவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படும். சட்டம் ஒழுங்கு சீர்குலையும். பாஜக வெற்றிபெற்று யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வரானால்தா்ன் மக்கள் அமைதியாக இருக்க முடியும். இவ்வாறு அமித் ஷா பேசினார். - பிடிஐ

SCROLL FOR NEXT