கர்நாடக மாநிலம் சிக்மகளூரு அருகே உள்ள ஒரு அரசு பள்ளி வளாகத்தில் முஸ்லிம் மாணவிகளிடம் ஹிஜாபை அகற்றுமாறு பள்ளி நிர்வாகத்தினரும் போலீஸாரும் வலியுறுத்தினர். படம்: பிடிஐ 
இந்தியா

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று திறப்பு; பலத்த போலீஸ் பாதுகாப்பு: உடுப்பி, மைசூருவில் 144 தடை உத்தரவு

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திறக்கப்படுகின்றன.

கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்துகடந்த 5-ம் தேதி பி.யு.சி (மேல்நிலை வகுப்புகள்) மற்றும் பட்டயகல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வன்முறை ஏற்பட்டதால் கடந்த 9-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வரும் 19ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு அருகே போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே முஸ்லிம் மாணவிகள் தொடுத்துள்ள ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம், ''கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்டமத ரீதியான உடைகளை அணியக்கூடாது'' என உத்தரவிட்டது.கடந்த திங்கள்கிழமை 10-ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது ஹிஜாப் அணிந்து வந்தமாணவிகள் பள்ளிகளுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஹிஜாபை அகற்றிவிட்டு வந்தபிறகே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து இன்று மாநிலம் முழுவதிலும் உள்ள பியுசி, பட்டய கல்லூரிகள், பாலிடெக்னிக், நர்சிங்உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுப்பி, ஷிமோகா, மைசூரு ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள‌து. அதேபோல கல்வி நிலையங்களுக்கு அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், '' தேர்வுகள் நெருங்கி வருவதால் கல்லூரிகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலான உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் போராட்டத்தில் ஈடுபடாமல் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும்''என்றார்.

SCROLL FOR NEXT