திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கரோனா பரவலை தடுக்கும் விதத்தில், இலவச தரிசன டிக்கெட் வழங்குவதை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேவஸ்தானம் நிறுத்தி வைத்தது. இதற்கு பதில், ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் இலவச டிக்கெட்களை ஆன்லைனில் வெளியிட்டது.
இந்நிலையில், கரோனா பரவல் வெகுவாக குறைந்ததையொட்டி, இன்று 16-ம் தேதி முதல் இலவச தரிசனத்திற்கு 15-ம் தேதி நேரில் டிக்கெட்களை வழங்குவது என திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக தினமும் திருப்பதியில் உள்ள நிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதி, பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜர் சத்திரங்கள் என மொத்தம் திருப்பதியில் 3 இடங்களில் தனி மையங்கள் அமைத்து டிக்கெட்கள் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்தது. திங்கட்கிழமை நள்ளிரவு முதலே திரளான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டிக்கெட் வழங்கும் மையங்களுக்கு வெளியே படுத்து உறங்கி, நேற்று காலை டிக்கெட்களை பெற்றனர். இவர்கள் இன்று சுவாமியை தரிசிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.