கர்நாடகாவில் ஏற்கெனவே இருமுறை வினாத்தாள் கசிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு நடுவே பிளஸ் 2 வேதியியல் மறுதேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) குளறுபடி ஏதும் இன்றி நடந்து முடிந்தது.
மாநிலம் முழுவதும் 968 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. வேதியியல் தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் பலர் கருத்து தெரிவித்தனர்.
மகாராணி லட்சுமி கல்லூரி மாணவி லாவண்யா கூறும்போது, "கடந்த 21-ம் தேதி நடைபெற்ற தேர்வின்போது வழங்கப்பட்ட வினாத்தாளைவிட இன்றைய தேர்வு வினாத்தாள் மிக எளிமையாக இருந்தது. பாடத்திட்டத்துக்கு வெளியிலிருந்து ஒரு கேள்விகூட கேட்கப்படவில்லை" என்றார்.
முன்னதாக, பியூசி 2-ம் ஆண்டு (பிளஸ் 2) வேதியியல் தேர்வு கடந்த மார்ச் 21-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்வுக்கு முந்தைய தினம் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் வெளியானதால் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த மார்ச் 31-ம் தேதி மீண்டும் வேதியியல் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு தினத்தன்று வினாத்தாள் கசிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்வித்துறை மீண்டும் வேதியியல் தேர்வை ரத்து செய்தது.
10 நாட்களில் இருமுறை வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து, கர்நாடகா முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.