இந்தியா

ஏழுமலையானை தரிசிக்க இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் விநியோகம்

செய்திப்பிரிவு

திருப்பதி: கரோனா தொற்று பரவும் அபாயம் இருந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன்கள் நேரடியாக வழங்குவது நிறுத்தப்பட்டது. ரூ.300 மற்றும் தர்ம தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் மட்டுமே திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் வழங்கியது. ஆனால், இந்த ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் சில கிராமப்புற பக்தர்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், கரோனா தொற்று குறைந்தால் மீண்டும் சர்வ தரிசன டோக்கன்களை நேரடியாக திருப்பதியில் விநியோகம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது.

அதன்படி, தற்போது கரோனா 3-ம் அலை குறைந்ததால், இன்று முதல் திருப்பதியில் உள்ள நிவாசம் விடுதி, கோவிந்தராஜர் சத்திரம் மற்றும் அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இதற்காக தனி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தினமும் 15,000 இலவச தரிசன டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும். ஆதார் அட்டை கொண்டு வரும் பக்தர்கள் அனைவரும் இந்த டோக்கன்களை பெறலாம்.

SCROLL FOR NEXT