புதுடெல்லி: புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
காஷ்மீரில் புல்வாமா மாவட் டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் (சிஆர்பிஎஃப்) வாகனங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீர மரணமடைந்தனர். இதற்கு பதிலடி யாக விமானப் படையினர் 2019 பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் பாலகோட்டில் தீவிரவாத முகாம் கள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தினர்.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் 3-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு புகழாரம் சூட்டினார். இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘2019-ம் ஆண்டு இதேநாளில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நமது நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய மிகச் சிறந்த சேவையை நினைவு கூர்கிறேன். அந்த வீரர்களின் துணிச்சலும் உயர்ந்த தியாகமும் ஒவ்வொரு இந்தியரையும் வலுவான மற்றும் வளமான நாட்டை நோக்கி உழைக்க தூண்டுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய தீவிரவாதி சிக்கியது எப்படி?
புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்த ஒரு மாதத்தில் 2019 மார்ச் மாதம் தாக்குதல் சம்பவத்தி்ல் தொடர்புடைய முக்கிய தீவிரவாதியான உமர் பரூக் அல்வியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அவருடன் பதுங்கியிருந்த கம்ரான் என்ற தீவிரவாதியும் கொல்லப்பட்டார். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் உறவினர்தான் உமர் பரூக் அல்வி. அவர் சிக்கியது பற்றி இப்போது தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடந்த பிறகு புல்வாமா மாவட்ட எஸ்பிக்கு ‘ஹாய் ஜனு.. உன் வீட்டுக்கு வந்து கொலை செய்வேன்’ என்று வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பிவிட்டு பின்னர், அந்த சிம்கார்டை உமர் பரூக் அல்வி கழற்றிவிட்டார். புல்வாமா மாவட்ட எஸ்பி அந்த வாட்ஸ் நம்பரை சேமித்து வைத்து சைபர் கிரைம் போலீஸாரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் தொடர்ந்து அந்த நம்பரை கண்காணித்து வந்தனர். பல நாட்களுக்குப் பிறகு அல்வி மீண்டும் அந்த சிம்கார்டை செல்போனில் போட்டு பயன்படுத்தி உள்ளார். அந்த நம்பரை கண்காணித்து வந்த போலீஸார் உஷாராயினர். செல்போன் சிக்னலை வைத்து நவ்காம் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த உமர் பரூக் அல்வியையும் மற்றொரு தீவிரவாதியான கம்ரானையும் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொன்றனர்.