இந்தியா

இருமுறை வினாத்தாள் கசிந்ததால் கர்நாடகாவில் பலத்த பாதுகாப்புடன் இன்று பிளஸ் 2 வேதியியல் தேர்வு

இரா.வினோத்

கர்நாடகாவில் ஏற்கெனவே இரு முறை வினாத்தாள் கசிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு நடுவே பிளஸ் 2 வேதியியல் தேர்வு இன்று மீண்டும் நடைபெறுகிறது.

பியூசி 2-ம் ஆண்டு (பிளஸ் 2) வேதியியல் தேர்வு கடந்த மார்ச் 21-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்வுக்கு முந்தைய தினம் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் வெளியானதால் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த மார்ச் 31-ம் தேதி மீண்டும் வேதியியல் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு தினத்தன்று வினாத் தாள் கசிந்த‌து. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்வித்துறை மீண்டும் வேதியியல் தேர்வை ரத்து செய்தது.

10 நாட்களில் இருமுறை வினாத்தாள் கசிந்ததை கண்டித்து, கர்நாடகா முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து கர்நாடக மாநில இணை தேர்வு ஆணையர் உட்பட 40 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சிஐடி போலீஸாரின் வலையில் மருத்துவ கல்வித்துறையின் உதவியாளர், 2 பள்ளி தாளாளர்கள், ஒரு தலைமையாசிரியர் உட்பட 5 பேர் கைதாகினர்.

இந்நிலையில் வேதியியல் தேர்வு இன்று மீண்டும் நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் வினாத்தாள் கசிவதைத் தடுக்கும் வகையில் வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், முக்கிய கல்லூரிகள் ஆகியவற்றில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள், மேற்பார்வை யாளர்கள், பறக்கும் படையினர் செல்போன், வாட்ஸ் அப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என கல்வித் துறை வட்டாரத்தில் தகவல் வெளி யாகியுள்ளது. இதனால் கர்நாடக மாணவர்கள் மருத்துவம், பொறியி யல் ஆகியவற்றுக்கான ம‌த்திய நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.

SCROLL FOR NEXT