லக்னோ: காங்கிரஸை அழிக்க ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா மட்டுமே போதும் என்று கிண்டல் செய்துள்ளார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.
403 தொகுதிகளைக் கொண்டஉத்தரப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக சஹாரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா,படாவுன், பரெய்லி மற்றும் ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களுக்குட்பட்ட 55 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் கூறியிருப்பதாவது: அண்மையில் நான் உத்தராகண்டுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றிருந்தேன். அங்கு மக்களிடம் நான், காங்கிரஸின் முடிவுக்காக நீங்கள் யாருமே வேலை செய்யத் தேவையில்லை. காங்கிரஸின் அழிவிற்கு ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காதியும் மட்டுமே போதும். ஏற்கெனவே இங்கு காங்கிரஸுக்குப் பெரிய வாய்ப்பும், எதிர்காலமும் இல்லை. அப்படியிருக்க அக்காவும், தம்பியும் சேர்ந்து அதை இன்னும் கீழே இழுத்துச் செல்வார்கள். எனவே அதை விதிவசம் விட்டுவிடுவோம் என்று பேசினேன். அதையே இப்போது இங்கு நினைவுகூர்கிறேன்.
உத்தரப் பிரேதசத்திலும், உத்தர்காண்டிலும் மீண்டும் ஆட்சியமைக்க பாஜக திட்டமிட்டு வரும் சூழலில் யோகி ஆதித்யநாத் பாஜகவின் சாதனைகளைப் பட்டியலிட்டும் காங்கிரஸின் பின்னடைவு என சில்வற்றை சுட்டிக்காட்டியும் பேட்டியளித்துள்ளார்.
அவரது பேட்டியின் துளிகள்:
* இந்தியா, அரசியல் சாசனப்படி ஆளப்படுமே தவிர இஸ்லாமியர்களுக்கான ஷாரியத் சட்டத்தின்படி ஆளப்படாது.
* இந்தியா, அரசியல் சாசனப்படி ஆளப்படுமே தவிர இஸ்லாமியர்களுக்கான ஷாரியத் சட்டத்தின்படி ஆளப்படாது. நமது பிரதமர் மோடி, முத்தலாக் முறையை ரத்து செய்தார். இதனால் முஸ்லிம் மகள்களின் உரிமை காக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான மரியாதையை மாண்பை பிரதமர் உறுதி செய்துள்ளார். அந்த மகளுக்கான மாண்பை உறுதி செய்யவே நமது தேசம் அரசியல் சாசனப்படி ஆளப்படுமே தவிர ஷாரியத் சட்டத்தால் அல்ல எனக் கூறுகிறோம்
* இது புதிய இந்தியா. உலகளவில் பிரபலமான தலைவரைப் பிரதமராகக் கொண்ட புதிய இந்தியா. இந்த புதிய இந்தியா உலகம் இருக்கும்வரை அரசியல் சாசனப்படி மட்டுமே ஆளப்படும். தலிபான் மனப்பான்மை கொண்ட சில மதவெறியர்களின் எண்ணங்கள் என்றுமே நிறைவேறாது.
இவ்வாறாக யோகி ஆதிய்நாத் பேசியுள்ளார்.