புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 34,113 என்றளவில் குறைந்துள்ளது. இது நேற்றைவிட 24% குறைவாகும். அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதமும் 3.19% என்றளவிலும், வாராந்திர பாசிடிவிட்டி ரேட் 3.99% என்றளவிலும் உள்ளது. (பாசிடிவிட்டி ரேட் அதாவது பரவல் விகிதம் என்பது 100ல் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் கணக்கீடு)
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்றாளர் கண்டறியப்பட்டார். அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் அமலுக்கு வந்தன. அரசாங்கமும் நாட்டில் மூன்றாவது கரோனா அலை ஏற்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
கரோனா தொற்று பிப்ரவரி தொடங்கியதிலிருந்தே குறைந்துவரும் நிலையில் பல்வேறு தளர்வுகளும் அமலாகியுள்ளன. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் இன்று மழலையர் பள்ளி முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கின.
7 நாட்கள் தனிமை கட்டாயமில்லை: அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியர், விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், வீடுகளில் ஏழு நாட்கள் கட்டாயமாக தனிமைப் படுத்திக் கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில், திருத்தப்பட்ட கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியர் இனி வீடுகளில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. வருகை தந்த நாளில் இருந்து 14 நாட்களுக்கு தங்கள் உடல் நிலையை கண்காணித்துக் கொள்ள வேண்டும். இந்த வழிகாட்டுதல் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,113 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் 3.19% என்றளவில் உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 3.99%. நோயில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.37% ஆக உள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,113 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,26,65,534.
* கடந்த 24 மணி நேரத்தில் 91,930 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,16,77,641.
* கடந்த 24 மணி நேரத்தில் 346 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,09,011.
* இதுவரை நாடு முழுவதும் 173 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி திட்டம் அமலில் உள்ள நிலையில், இந்த வயதுடையோரில் 70% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.