இந்தியா

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு: விதிமுறைகளை கடுமையாக்க மத்திய அரசு முடிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் (எம்ஜிஎன்ஆர்இஜிஓ) நடைபெறும் முறைகேடுகளை தடுத்த விதிமுறை களை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வரும் நிதி ஆண்டில் இத்திட்டத் துக்கு ரூ.73 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமுந்தைய ஆண்டைவிட 25% குறைவாகும். 2021-2022-ம் நிதி ஆண்டில் இத்திட்டத்திற்கான திருத்திய மதிப்பீட்டுத் தொகை ரூ.98 ஆயிரம் கோடி. ஆனால் செலவான தொகை பட்ஜெட் மதிப்பீடான ரூ.73 ஆயிரம் கோடியாக இருக்கும் என்பதால் வரும் நிதி ஆண்டுக்கான ஒதுக்கீடு போதுமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா பாதிப்பு காரணமாக பட்ஜெட் ஒதுக்கீட்டைவிட திருத்தியமதிப்பீட்டுத் தொகை அதிகமாகவே உள்ளது. அதேசமயம்இத்திட்டத்தை செயல்படுத்து வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பயனர்களுக்குக் கிடைக்கும் பலனைவிட இடைத்தரகர்கள் அதிகம் பயனடைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பணிபுரியும் பயனர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணப் பரிவர்த்தனை செய்யும் முறை இருப்பினும், சில இடங்களில் நேரடியாக பணம்வழங்கல் முறை உள்ளது. இங்கெல்லாம் முறைகேடுகளுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. சிலஇடங்களில் தரகர்கள் பயனர்களிடம் நேரடியாகச் சென்று, அவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்த்து விடுவதாகவும், வங்கிக் கணக்கில் பணம் வந்தவுடன் தங்களுக்கு குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என்றும் கூறி பதிவு செய்கின்றனர். இதன் மூலமும் முறைகேடு நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றை எல்லாம் நீக்கும்வகையில் இத்திட்ட செயல்பாடுகளில் பணப் பரிவர்த்தனை முறையை மேலும் கடுமையாக்க ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தரகர் மூலமாக சேர்க்கப்படும் பயனர்கள், வேலைக்கே செல்லாமல் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக தரகருக்கு தந்து விடுகின்றனர். இதனால் இத்திட்டத்தின் மூலமாக நடைபெற வேண்டிய எந்த வேலையும் நடைபெறுவதில்லை என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இருப்பினும் கரோனா பாதிப்பு காரணமாக வேலையிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளாக தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. - பிடிஐ

SCROLL FOR NEXT