இந்தியா

குஜராத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கைப்பற்றிய கடற்படை

செய்திப்பிரிவு

அகமதாபாத்: ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடற்படை அதிகாரிகளும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகளும் குஜராத்தில் கைப்பற்றியுள்ளனர்.

குஜராத் மாநிலம் போர்பந்தர்-ஜாம்நகர் இடையேயான கடற்கரைப் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து குஜராத் மாநிலத்தில் பணியாற்றும் கடற்படை அதிகாரிகளும், குஜராத் மாநில போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கப்பலில் இந்தப் போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போர்பந்தர்-ஜாம்நகர் இடையேயான கடல்பகுதியில் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் அந்த போதைப் பொருள் கடத்தல் நடப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் 763 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களைக் கைப்பற்றினர். இதில் ஹெராயின் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் இருந்தன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடியாகும் என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

தீவுகள் கண்காணிப்பு

குஜராத்தின் அருகில் சிறிய தீவுகள் உள்ளன. அந்த தீவுகளுக்கு அவ்வளவாக பொதுமக்கள் செல்வதில்லை. அந்தப் பகுதியை போதைப் பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தி வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருட்களை குஜராத் கடல் பகுதியில் உள்ள சிறுசிறு தீவுகளில் பதுக்கி வைக்க பயன்படுத்தி உள்ளனர். அங்கிருந்து குஜராத் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு சிறிது சிறிதாக போதைப் பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இதுபோன்ற சிறு சிறு தீவுகளை கடற்படையினர் தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.

- பிடிஐ

SCROLL FOR NEXT