பனியில் சிக்கித் தவித்த பெண்ணை மீட்டு 1.5 கிலோமீட்டர் தூரத்துக்கு ராணுவ வீரர்கள் தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஜம்மு-காஷ்மீரின் பல மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில், பண்டிப்போரா மாவட்டம் பரூப் கிராமத்தைச் சேர்ந்த பசாலி பேகம் என்ற பெண் நேற்று பனிப் பொழிவில் சிக்கிக் கொண்டார்.
இதுகுறித்து விவரம் அறிந்த இந்திய ராணுவத்தின் சீனார் கார்ப்ஸ் பிரிவினர் விரைந்து அந்த இடத்துக்குச் சென்றனர்.
அங்கு பனியில் சிக்கியிருந்த அந்த பெண்ணை மீட்டு ஸ்டிரெச்சரில் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹெலிபேடுக்கு தூக்கி வந்தனர். அங்கு தயாராக இருந்த ஹெலிகாப்டர் மூலம் அவர் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நலமாக உள்ளார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பான தகவலை சினார் கார்ப்ஸ் ராணுவ அதிகாரிகள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஸ்ரீநகரில் நேற்று மைனஸ் 3 டிகிரி வெப்பநிலை பதிவானதாகவும், பஹல்காமில் மைனஸ் 8.1 டிகிரி வெப்பநிலை பதிவானதாகவும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. - பிடிஐ