விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்று அமலாக்க இயக்குனரகம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
மொத்தமாக ரூ.9,000 கோடி வங்கிக் கடனை திருப்பி செலுத்தாது பற்றிய வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ரூ.900 கோடி ஐடிபிஐ வங்கிக் கடன் மோசடி வழக்கு குறித்து விசாரணையாளர்களுக்கு மல்லையா ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி அவரது பாஸ்போர்ட்டை முடக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடிதம் மூலம் வலுவான கோரிக்கை வைத்துள்ளனர்.
மாநிலங்களவை உறுப்பினர் என்ற தகுதியில் அவருக்கு டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது, அதனைப் பயன்படுத்தி அவர் வங்கிக் கடன் மோசடிப் புகார் தீவிரமடைந்த மார்ச் 2-ம் தேதியே பிரிட்டன் சென்று விட்டார்.
மல்லையா நேரில் ஆஜராக அவருக்கு 3 முறை புதிய தேதிகளை அளித்தும் விசாரண அதிகாரிக்கு மல்லையா தரப்பில் எந்தவித ஒத்துழைப்பும் கிட்டவில்லை என்று அமலாக்க இயக்குனரகம் வெளியுறவு அமைச்சகத்துக்கு எழுதியுள்ளாது.
பாஸ்போர்ட் சட்டத்தின் படி, டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றால் 1967-ம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டத்தின் படி அவரதுபாஸ்போர்ட்டை முடக்கி உத்தரவிட சட்டத்தில் இடமுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அமலாக்கப் பிரிவினரின் இந்த கோரிக்கையை மத்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்குமேயானால், மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன் அதிகாரிகளுக்கு மத்திய அரசு தகவல் அனுப்பும்.
நேரில் ஆஜராக 3 முறை வாய்ப்புகள் அளித்தும் மல்லையா ஆஜராகவில்லை. மார்ச் 18, ஏப்ரல் 2, ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் மல்லையா ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் கடனை திருப்பி அளிப்பது குறித்த வழக்கு நடைபெறுவதால் தன்னால் நேரில் வந்து வாக்குமூலம் அளிக்க இயலவில்லை என்று தட்டிக் கழித்துள்ளார்.
வழக்கில் முக்கியமானவர் மல்லையாதான், எனவே அவர் நேரில் ஆஜராவது மிக முக்கியம் என்கின்றனர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள்.
எனவே பாஸ்போர்ட்டை முடக்கினால், கோர்ட் மூலம் ஜாமீன் பெற முடியாத வாரண்ட் பிறப்பிக்க வழியுண்டு, இதனால் இண்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் அளித்து அவர் உலகில் எங்கிருந்தாலும் இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும் என்கின்றனர் அமலாக்க துறையினர்.
ஏற்கெனவே ஏப்ரல் 21-ம் தேதிக்குள் மல்லையா தனது உள்நாட்டு, வெளிநாட்டு சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.