பெங்களூரு: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா 4 ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் சிறப்பு சலுகை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு, 'சசிகலா சிறப்பு சலுகைகளை அனுபவித்தது உண்மை' என 245 பக்க அளவில் அறிக்கை அளித்தது.
இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் சிறை தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா, ஆய்வாளர் பி.சுரேஷா, துணை ஆய்வாளர் கஜராஜா, சசிகலா, இளவரசி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பெங்களூரு மாநகர 24-வது அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயண பட் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிருஷ்ணகுமார், அனிதா, பி.சுரேஷா, கஜராஜா, சசிகலா, இளவரசி ஆகிய 6 பேரும் மார்ச் 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.