இந்தியா

வட மாநிலங்களை விடக் குறைவான நிதி தென்னகத்திற்கு ஒதுக்கப்படுகிறது:  திமுக எம்.பி. கதிர் ஆனந்த் புகார்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: வட மாநிலங்களை விடக் குறைவான நிதி தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுவதாக திமுகவின் எம்.பியான கதிர் ஆனந்த் மத்திய அரசு மீது புகார் கூறியுள்ளார். இதை அவர் மக்களவையில் தனது பட்ஜெட் விவாதத்திலான உரையில் குறிப்பிட்டார்.

இதுகுறித்து நாடாளுமன்ற மக்களவையில் வேலூர் தொகுதி எம்.பி.யான கதிர் ஆனந்த் பேசியதாவது: மத்திய அரசின் இவ்வாண்டு பட்ஜெட் 2022-23 வெகுஜன விரோத பட்ஜெட் ஆகும்.

இதில் சாதாரண மக்களுக்கு பயன் ஏதுமில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும் சுட்டிக் காட்டியுள்ளார். ஏழை மக்களின் தேவைகள் குறித்து எதுவும் செய்யாமல் நன்மைகள் செய்யத் தவறினால் அந்த அரசு தோல்வி அடைந்ததாகவே பொருள்.

இந்த பட்ஜெட் பாரபட்சமானது. வட மாநிலங்களுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தென் மாநிலங்களுக்கு குறைவான‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கரோனா பெருந்தொற்று காலத்தில் தென் மாநிலங்களின் எம்.பி.க்கள் நிவாரண உதவிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமரிடம் கோரிக்கை வைத்தும் எதுவும் செய்யவில்லை.

மாநிலங்களுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்னமும் முழுமையாக தரப்படவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு வெகுவாக குறைத்துள்ளது. இதனால் கிராமப்புற ஏழை மக்கள் குறிப்பாக ஏழைப் பெண்கள் வருவாய் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழைகளின் பொருளாதார சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. வேறு வருவாயின்றி தனது கணவர் தயவின்றி வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது,

இந்த அரசு 2022 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக்கும் திட்டம், தென்னிந்திய நதிகள் இணைப்புத் திட்டம் எனக் கொண்டு வந்திருப்பது செயலாக்கப்படவில்லை.

மேலும், 2022 ஆம் ஆண்டிற்குள் தொழில் முனைவோர்க்கு 59 நிமிடங்களில் ஒரு கோடி கடனுதவி திட்டம், புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி 175 ஜிகா வாட் உற்பத்தி ஆகிய திட்டங்களும் பல ஆண்டுகளாக சொல்லளவிலே உள்ளது.

விவசாயத்தை பொறுத்தவரை இது ஒரு பெரிய பிரச்சினை என்றும் நிறைய திட்டங்கள் செயல்படுத்துவதாக கூறினாலும் எதையும் உருப்படியாக செயல்படுத்தவில்லை.

இந்த அரசிடம் நாடாளுமன்ற எம்.பி. ஒருவர், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கக் கோரி விவசாயிகள் அறப் போராட்டம் நடத்திய போது எவ்வளவு விவசாயிகள் உயிரிழந்தனர் என்ற கேள்வி எழுப்பினார்.

இதற்கு விவசாயத்துறை அமைச்சகத்தில் தரவுகள் இல்லை என்று அமைச்சர் பதில் அளிக்கிறார். இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு நிவாரண நிதிவழங்கப்பட்டதா? என்ற கேள்விக்கு, அது மாநில அரசுகளின் பொறுப்பு என்று பதில் தரப்படுகிறது.

இது, மத்திய அரசு அதன் கடமையிலிருந்து கை கழுவிக் கொண்டு நழுவும் செயலாகும். வேளாண் சட்டம் போட்ட பிறகு அதை மீண்டும் திரும்பப் பெறும் வரையிலான காலத்தில் விவசாயிகள் போட்ட ஒப்பந்தங்கள் அப்படியே இருக்கும் என்பது, விவசாயிகள் விரோத செயலாகும்.

ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலும் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி தென் மாநிலங்களை வஞ்சித்து விட்டது. வடக்கு ரெயில்வேக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.66,000 கோடி ஒதுக்கீடு செய்த ஒன்றிய அரசு தென்னக ரயில்வேக்கு வெறும் ரூ.7114 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் கோரிக்கை மிகவும் முக்கியமானது. 2020க்கு முன் கட்டப்பட்ட மருத்துவமனைகள் முழுக்க முழுக்க மாநில அரசு நிதியிலிருந்து கட்டப்பட்டன.

2020 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் ஒன்றிய அரசு 60 சதவிகித நிதி ஒதுக்கீடு செய்கிறது. 40 சதவிகிதம் மாநில அரசு செலவிடுகிறது. மேலும் மருத்துவமனை கட்டுவதற்கு மட்டுமே தான் மத்திய அரசு நிதி வழங்குகிறது.

ஆனால் மருத்துவமனை நடத்துவதற்கு ஆகும் மொத்த செலவும் மாநில அரசு தலையில் தான் விழுகின்றன. டாக்டர்கள் நர்சுகள் சுகாதார சிப்பந்திகள் சம்பளம், பராமரிப்பு செலவுகள், மருந்து மருத்துவ உபகரணங்கள் செலவுகள் இவை அனைத்தையும் மாநில அரசு தான் செய்ய வேண்டும்.

ஆனால் நீட் தேர்வின் மூலம் அனைத்து இடங்களையும் நீட் மதிப்பெண் மூலமாக மத்திய அரசு நிரப்புகிறது. மாநில அரசுக்கு அந்த உரிமை மறுக்கப்படுகிறது.

இது பெரிய பிரச்சினை. மேலும் இந்த நீட் வாயிலாக வெளிமாநில மாணவர்கள் தமிழ்நாட்டில் படித்து பட்டம் வாங்கிய பிறகு அவர்கள் மாநிலத்துக்கு சென்று விடுவர். தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும்.

எனவே தான் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்த பட்ஜெட் சாதாரண மக்களுக்கு ஒன்றும் செய்யாத திருப்தி அளிக்காத பட்ஜெட்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT