டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 14-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை, ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) ஆய்வு செய்து அவர்களுடைய பொருளாதார நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: உத்தராகண்ட் மாநிலத்தில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் 252 பேர் கோடீஸ்வரர்கள். அவர்களில் அதிகபட்சமாக பாஜக வேட்பாளர்கள் 60 பேர் உள்ளனர். அதற்கடுத்த நிலைகளில் காங்கிரஸ் (40), சுயேச்சைகள் (40), ஆம் ஆத்மி (31), பகுஜன் சமாஜ் (18), உத்தராகண்ட் கிரந்தி தள் (12), சமாஜ்வாதி (8) வேட்பாளர்கள் உள்ளனர்.
லக்சார் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அன்டிரிக் ஷ் சைனியின் சொத்து மதிப்புதான் வேட்பாளர்களிலேயே அதிகபட்சமாக உள்ளது. இவருக்கு ரூ.123 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. மிகவும் ஏழை வேட்பாளராக நகர் (கார்வல்) தொகுதியில் போட்டியிடும் சோஷலிட்சி யுனிட்டி சென்ட்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) வேட்பாளர் சந்தீப் குமாரின் ஆண்டு வருமானம் ரூ.1,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.