தனது வீட்டில் மது வைத்திருந்ததாகவும், அருந்தியதாகவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது பிஹார் மாநில போலீஸார் இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இது, நேற்று ஒரு இந்தி செய்தி தொலைக்காட்சி சேனல் வெளியிட்ட ‘ஸ்டிங் ஆப்ரேஷன்’ எதிரொலியாகக் கருதப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக இருக்கும் பிஹாரில், கடந்த ஏப்ரல் 5 முதல் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அம் மாநிலம் முழுவதிலும் உள் மற்றும் வெளிநாட்டு மதுவகைகள் அனைத்தும் விற்கவும், வைத்திருக்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை வெளியான ஒரு இந்தி தொலைக்காட்சி சேனலில் காங்கிரஸ் எம்.எல்.ஏவான வினய் வர்மா, பாட்னாவில் விருந்தினர்களுக்கு மது விநியோகிப்பது போன்ற காட்சி வெளியானது. இதில் வர்மா, தன் விருந்தாளிகளுக்கு அருந்த வேண்டி மது அளிப்பதுடன் அதன் மீது தடையாக இருப்பினும் தனது தொகுதி வீட்டில் வைத்திருப்பதாகவும் கூறுகிறார். இது, பிஹாரின் மேற்கு சாம்பாரம் மாவட்ட நர்கடியாகன்ச் தொகுதியின் எம்.எல்.ஏவான வினய் வர்மாவின் வீட்டில் இந்தி சேனல் ரகசியக் கேமிராவில் பதிவு செய்த காட்சி ஆகும்.
இது குறித்து வினய் வர்மா கூறுகையில், ‘நான் இந்த நாட்டின் பொறுப்புள்ள பிரஜை என்பதுடன் மது வகைகளை கைகளிலும் தொடாதவன். கடந்த 25 ஆம் தேதி இரவு எனக்கு பாட்னாவின் ஓட்டல் சாணக்யாவில் இருந்து சில பத்திரிகையாளர்களிடம் இருந்து தொலைபேசிகள் வந்தன. அதில், மேற்கு சாம்பாரத்தில் மஹாத்மா காந்தி நடத்திய சத்தியாகிரகம் பற்றி அறிய விரும்புவதாகக் கூறி என்னை அழைத்தனர். இதை ஏற்று நான் அங்கு சென்ற போது அவர்கள் மதுவின் மீது கேள்வி எழுப்பி என்னை கோபமுறச் செய்தனர். அவர்கள் வார்த்தைகளை எனது வாயில் போட்டு வாங்கினர். மது விலக்கை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இதில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை’ என கூறினார்.
இந்த செய்தி வெளியானவுடன் அதன் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்த நிதிஷ் அரசு வினய் வர்மா மீது இரு வழக்குகளை பதிவு செய்தது. இத்துடன் வர்மாவின் நர்கடியாகன்ச் வீட்டில் போலீஸ் மற்றும் மது தடுப்பு ஆகிய இரு படையினரால் இணைந்து பாட்னா மற்றும் நர்கடியாகன்ச் வீடுகளில் திடீர் சோதனையும் நடத்தப்பட்டது. இதில், மது பாட்டில்கள் ஒன்றும் கிடைக்கவில்லை.
இது குறித்து பிஹார் மாநில மதுவிலக்கு அமல் பிரிவின் ஆணையர் குன்வார் ஜங் பஹதூர் கூறுகையில், ‘சேனலில் வெளியான படக் காட்சியில் எம்.எல்.ஏ தன் கைகளில் மதுவை வைத்து அருந்துவதுடன் தனது விருந்தினர்களுக்கு அதை பரிமாறி உபசரிக்கிறார். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் எம்.எல்.ஏவிற்கு 10 வருடம் சிறைத்தணடனையுடன் ரூபாய் பத்து லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்’ என கூறினார்.
இந்த சம்பவம் நிதிஷ் தலைமையில் பிஹாரை ஆளும் மெகா கூட்டணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், காங்கிரஸுன் அதன் முக்கிய உறுப்பினராக இருப்பது காரணம். இத்துடன், பிஹார் காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் வினய் வர்மாவிடம் ஒரு வாரத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பிஹாரில் மது விலக்கு அமலுக்கு பின் வெளியாகி உள்ள முதல் அரசியல்வாதி சம்மந்தப்பட்ட வழக்கு இது ஆகும். இந்த வழக்கின் மீது தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.