திருப்பதி: திருப்பதி அடுத்துள்ள கலிசர்லா எனும் ஊரில் அத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ. கலிசர்லா பிரபாகர் ரெட்டி மறைவையொட்டி, 10-ம் நாள் துக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது நெருங்கிய உறவினர்கள் நூற்றுக்கணக்கான கார்களில் கலிசர்லா வந்தனர். இவர்கள் காலை 11 மணியிலிருந்து மாந்தோப்பு ஒன்றில் சேவல் பந்தயம் நடத்தினர்.் சேவல் பந்தயத்திற்கு போலீஸ் அனுமதியும் பெறவில்லை.
இந்நிலையில், மும்மரமாக நடைபெற்று வந்த சேவல் பந்தயத்தில், காலில் கத்தி கட்டப்பட்டிருந்த ஒரு சேவல் திடீரென அங்கு கூடி இருந்த பொதுமக்கள் மீது பாய்ந்தது. இதில், மதிமேடு கிராமத்தை சேர்ந்த கங்குலய்யா (37) என்பவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், ரத்தம் அதிகமாக போனதால், அருகே உள்ள ஒரு ஆர்.எம்.பி மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெத்த திப்ப சமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கங்குலய்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அறிந்த சேவல் பந்தயம் நடத்தியவர்கள் அனைவரும் தலைமறைவாயினர். கலிசர்லா போலீஸார் வழக்கு பதிவு செய்து நேற்று 12 பேரை கைது செய்தனர்.