மேங்கு வங்க மாநில சட்டப் பேரவையின் 62 தொகுதிகளுக்கு 3-ம் கட்ட தேர்தல் இன்று நடை பெறுகிறது. இதையொட்டி, 75 ஆயிரம் துணை ராணுவப் படையினர் உட்பட ஒரு லட்சம்பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, “75 ஆயிரம் வீரர்கள் அடங்கிய 700 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வாக்காளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ள னர்.
இவர்களுக்கு உதவும் விதத்தில் வங்க மொழியும், உள்ளூர் நில அமைப்பும் தெரிந்த 25 ஆயிரம் மாநில போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றனர்.
வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர் கேட்டுக் கொண்டால், அதிகபட்ச தேவையை முன்னிட்டு மட்டுமே உள்ளூர் போலீஸார் வாக்குச் சாவடிக்குள் நுழைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்புப் படையின ரின் ரோந்து வாகனங்களில், சைரனும், பெரிய அளவில் தெளிவாக தெரியும்படி மத்திய பாதுகாப்புப் படை என்ற வாசகமும் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனத்தில் ஒரு உள்ளூர் போலீஸார் இடம்பெறுவார்.
அசாம் தேர்தல் முடிவடைந் துள்ளதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட ராணுவ வீரர்கள் தற்போது மேற்கு வங்கத்துக்கு தருவிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
3-ம் கட்ட தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 5.5 லட்சம் லிட்டர் சட்டவிரோத மது, ரூ. 9 லட்சம் கள்ள நோட்டுகள், 450 சட்டவிரோத ஆயுதங்கள், 529 வெடிப்பொருட்கள், 350 கிலோ வெடிமருந்து, 2,624 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுதவிர, 5,800 உரிமம் பெற்ற ஆயுதங்கள் காவல் நிலையத்தில் வாங்கி இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, 28 ஆயிரம் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடி வாரன்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,000 வாரன்டுகள் நிலுவையில் உள்ளன.