இந்தியா

சிங்கிள் டோஸ் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி

செய்திப்பிரிவு

கரோனா வைரஸுக்கு எதிரான ஒரே டோஸில் செலுத்திக் கொள்ளும் வகையிலான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.

மத்திய அரசின் மருந்த்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இத்தகவலை சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சிங்கிள் டோஸ் கொண்ட ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு டிசிஜிஐ அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இது நாட்டில் பயன்பாட்டுக்கு வரும் 9வது தடுப்பூசியாகும். இதனால் கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தேசத்தின் கூட்டுப் போராட்டம் இன்னும் வலுப்பெறும் என்று கூறினார்.

ரஷ்ய நாட்டுத் தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை இந்தியாவில் பெற்று விநியோகிக்கிறது ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டிஸ் லேப். ரஷ்ய நிறுவனம் ஸ்புட்னிக் V என்ற தடுப்பூசியையும் இந்தியாவுக்கு விநியோகித்துள்ளது. அதுவும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அது இரண்டு டோஸ்கள் கொண்டது. ஸ்புட்னிக் லைட் சிங்கிள் டோஸ் தடுப்பூசி. இந்தத் தடுப்பூசியை மற்ற தடுப்பூசிகளை செலுத்தியவர்களுக்கு இரண்டாவது டோஸாகப் பயன்படுத்துவது பற்றியும் ரெட்டிஸ் லேப் கிளினிக்கல் பரிசோதனைகளை முடித்து டிசிஜிஐயில் அறிக்கையை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஊசியில்லா தடுப்பூசியான ஜைக்கோவ் டி தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. சைகோவ்-டி தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.

இந்த தடுப்பூசி உலகின் முதல் பிளாஸ்மிட் டி.என்.ஏ வகை தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசியை 3 தவணைகளாக செலுத்த வேண்டும். ஊசிக்கு அச்சம் கொண்டவர்களுக்கு இந்த வகை தடுப்பூசி ஒரு நல்ல தீர்வு என்று கூறப்படுகிறது. ஸ்ப்ரிங் உதவியுடன் தோலில் இந்த ஊசி செலுத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT