இந்தியா

காஷ்மீரில் போதைப் பொருள் கடத்தல்: 3 பேர் சுட்டுக்கொலை

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி செய்த பாகிஸ்தானை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) 24 மணி நேரமும் ராணுவ வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தானை சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பலும் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்து வருகின்றனர். இதனையும் ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டார் பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் நேற்று அதிகாலை போதை பொருள் கும்பலை சேர்ந்தவர்களின் நடமாட்டம் இருப்பதாக எல்லை பாதுகாப்பு படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது எல்லையில் நுழைய முயன்ற 3 போதை பொருள் கடத்தல்காரர்களை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து போதை பொருளான ஹெராயின் கைப்பற்றப்பட்டது. மொத்தம் 36 பாக்கெட்டுகளில் ஹெராயின் போதை பொருள் இருந்தது.

இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அங்கு போலீஸாரும், ராணுவ வீரர்களும் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

- பிடிஐ

SCROLL FOR NEXT