கோப்புப் படம். 
இந்தியா

யாராலும் நிரப்பமுடியா வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார் லதா மங்கேஷ்கர்: பிரதமர் மோடி புகழஞ்சலி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: யாராலும் நிரப்பமுடியா வெற்றிடத்தை லதா மங்கேஷ்கர் விட்டுச் சென்றுள்ளார் என பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்னதாக, கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92.

இந்தி, தமிழ் என 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அவரது மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்

லதா திதியின் (அக்கா) பாடல்கள் பல்வேறு உணர்வுகளை வெளிக்கொணர்ந்தவை. இந்திய சினிமா அடைந்த மாற்றங்களை பல தசம ஆண்டுகளாக சேர்ந்தே வளர்ந்து கவனித்தவர். படங்களைத் தாண்டி தேச வளர்ச்சியில் அவர் அக்கறை கொண்டிருந்தார். அவர் எப்போதுமே இந்தியாவை வலுவான, வளர்ந்த இந்தியாவாகப் பார்க்க விரும்பினார்.

இவ்வாறு மோடி பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "லதா திதியிடமிருந்து எப்போதுமே நிறைந்த அன்பைப் பெற்றுள்ளதை பெருமையாகக் கருதுகிறேன். அவருடன் நான் பேசிப்பழகிய நினைவுகள் பசுமையாக இருக்கும். அவருடைய குடும்பத்தினருடன் பேசி எனது இரங்கலைப் பதிவு செய்துள்ளேன்" என்று சிலாகித்துக் கூறியுள்ளார்.

அதேபோல். "லதா திதி, தேசத்தின் யாராலும் நிரப்பமுடியாத நிரந்தர வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார். இந்தியக் கலாச்சாரத்தின் பாதுகாவலராக அவர் என்றும் அடுத்தடுத்த தலைமுறைகளால் நினைவுகூரப்படுவார்" என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தங்கக் குரலுக்கு அழிவில்லை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் லதா மங்கேஷ்கரின் தங்கக்குரலுக்கு அழிவில்லை என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: லதா மங்கேஷ்கரின் மறைவுச் செய்தியைக் கேட்டு வருந்துகிறேன். அவர் இந்தியாவின் செல்லக்குரலாக இருக்கிறார். அவருடைய தங்கக் குரலுக்கு அழிவே இல்லை. என்றும் ரசிகர்கர்கள் மனதில் அவரின் குரல் எதிரொலிக்கும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு ராகுல் காந்தி தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கே நேரில் சென்று லதா மங்கேஷ்கரின் உடலுக்கு அரசு சார்பில் முதல் அஞ்சலியை செலுத்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், "தேசத்தின் பெருமித அடையாளம். இசை உலகின் பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவு வருந்தத்தக்கது. இசையார்வலர்களுக்கு அவர் ஒரு மிகப்பெரிய உத்வேக சக்தி" என்று பதிவிட்டுள்ளார்.

மெல்லிசையின் ராணி லதா: மெல்லிசையின் ராணி, இந்தியாவின் நைட்டிங்கேல் என்றெல்லாம் புகழப்படும் லதா மங்கேஷ்கர் இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், வங்காளம் என 36 மொழிகளில் 70 ஆண்டுகளாக 25,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதா சாகேப் பால்கே விருது, தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு திரைத்துறை விருதுகளைக் குவித்தவர். 2001 ஆம் ஆண்டு அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT