கேரள கோயில்களில் வாண வேடிக் கைக்கு தடை இல்லை, அதேநேரம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம் என்று அனைத்து கட்சிக் கூட்டத் தில் முடிவு எடுக்கப்பட்டது.
கேரள மாநிலம், கொல்லம் அருகே பரவூர் கோயிலில் அண்மையில் நேரிட்ட வெடி விபத்தில் 114 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கோயில்களில் வாண வேடிக் கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கோயில்களில் வாண வேடிக்கை நிகழ்த்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் திருவனந்தபுரத்தில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கேரள கோயில்களில் தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்த்தலாம், அதேநேரம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது அவசியம் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
பூரம் திருவிழா
திருச்சூர் பூரம் திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. அந்த திருவிழாவை வழக்கம்போல வாண வேடிக்கை, யானைகள் ஊர்வலத்துடன் நிகழ்த்த கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகவும் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அறிவுரை வழங் கப்பட்டது.
மேலும் சபரிமலையில் வாண வேடிக்கை நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற தேவையான நடவடிக் கைகளை எடுக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதனிடையே பூரம் திரு விழாவை வாண வேடிக்கைகளுடன் நிகழ்த்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி திருச்சூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.
திருச்சூர் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஆர்ப் பிஷப் ஆண்ட்ரூஸும் போராட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசியபோது, பூரம் திருவிழா இல்லையென்றால் திருச்சூரே இல்லை என்று தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் அனுமதி
இதனிடையே திருச்சூர் பூரம் திருவிழாவில் வாண வேடிக்கை நிகழ்த்த கேரள உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
‘கொல்லம் விபத்து மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததே விபத்துக்கு முக்கிய காரணம். எனவே பூரம் திருவிழா வின்போது தடை செய்யப்பட்ட வெடிபொருட்களை பயன்படுத்தக் கூடாது.
குறைவான ஒலி எழுப்பும் பட்டாசுகளை பயன்படுத்தலாம். 2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் வாண வேடிக்கைகளை நடத்த வேண்டும். இதை கோயில் நிர்வாக அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்’ என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.