உலகளவில் விவசாயத்தில் முன்னோடியாக வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் உள்ள வறண்ட வெப்ப மண்டல சர்வதேச ஆராய்ச்சி மையத்தின் (இக்ரிசாட்) பொன் விழா ஆண்டு நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பொன்விழா ஆண்டுக்கான ‘லோகோ’ மற்றும் தபால் தலையை வெளி யிட்டார்.
பின்னர் இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
வரும் 25 ஆண்டுகளில் விவசாயத்தில் மேலும் பல பரிசோதனைகளை நடத்தி உலகத்துக்கே நாம் விவசாயத்தில் முன்னோடியாக திகழ வழி வகுத்திட வேண்டும். இக்ரிசாட் பரிசோதகர்களின் கடந்த50 ஆண்டுகால பங்கு சிறப்பானது. அவர்களுக்கு எனது பாராட்டுகள். நாட்டில் 80 சதவீதம் சிறு நில விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். மழை உரிய காலத்தில் பெய்யாவிடில் இவர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஆதலால், குறைந்த நீரில் அதிக மகசூல் கிடைக்கும் வகையில் நாம் விவசாயத்தை பெருக்க வேண்டும். அறுவடை சமயத்தில் காலநிலை மாற்றத்தால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். இதனை போக்க இக்ரிசாட் பரிசோதனை நிபுணர் குழுவினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நம் நாட்டில் 6 பருவகாலங்கள் 15 ரக காலநிலை மாற்றங்கள் ஆண்டு தோறும் நிகழ்கின்றன. இதற்கு ஏற்ப நாம் விவசாயத்தை பெருக்க வேண்டும். மேலும் நம் நாட்டில் 170 வறட்சி மாவட்டங்கள் உள்ளன. விவசாயத்தில் நவீன தொழில்நுட்ப புரட்சியை விரைவில்ஏற்படுத்த உள்ளோம்.
டிஜிட்டல் விவசாயத்தை பெருக்க பல மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த பட்ஜெட்டில் கூட சொட்டுநீர் பாசன விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.
பாமாயில் உற்பத்தியில் நாம்இன்னமும் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்உள்ளன. இது தொடர்பாக இவ்விரு மாநிலங்களுக்கும் அதிக ஊக்குவிப்பு இருக்கும். பயோ பாமாயில் உற்பத்தியில் செலவு மிக குறைவு.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பிரதமரை வரவேற்க வராத சந்திரசேகர ராவ்
ராமானுஜரின் 216 அடி உயர பஞ்சலோக சிலையை திறக்க நேற்று டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடியை சம்ஷாபாத் விமான நிலையத்தில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாஸ் யாதவ் மற்றும் பல பிரமுகர்கள் வரவேற்றனர்.
ஆனால், சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை தீவிரமாக விமர்சித்து வரும் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் திடீர் காய்ச்சல் காரணமாக விமான நிலையத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.