பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வு மற்றும் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் நிலையில், மணல் கொள்ளை தொடர்பாக காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங்கை அமலாக்கத் துறையினர் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
அதன்பின்னர் ஜலந்தரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் பூபிந்தர் சிங் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பிப்ரவரி 8-ம் தேதி வரை அமலாக்கத் துறையினரின் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக கடந்த மாதம் பூபிந்தர் சிங்கின் வீடு, அலுவலகம் உட்பட பஞ்சாபின் பல இடங்களில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரூ.10 கோடி ரொக்கம், ஏராளமான நகைகள், மணல் கொள்ளைக்கான ஆதாரங் களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதற்கிடையில், பஞ்சாப் முதல்வர் சன்னிக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையில் பல்வேறு கருத்து மோதல்கள் உள்ளன. குறிப்பாக பஞ்சாப் முதல்வர் பதவிக்கு குறி வைத்து சித்து அரசியல் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் முதல்வரின் மருமகன் கைது செய்யப்பட்டதால், பஞ்சாப் தேர்தலில் நேர்மையான ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும். மாபியா கும்பலுடன் தொடர்புடையவரை தேர்ந்தெடுத்தால் மக்கள் புறக்கணிப்பார்கள்’’ என்று சித்து தெரிவித்தார். -பிடிஐ