கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி, ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
முதன்மை செயலாளர் சிவசங் கரனும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சுங்கத்துறை, அமலாக்கப் பிரிவு, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆகியவை விசாரித்து வருகின்றன.
இதுதொடர்பாக ஸ்வப்னா சுரேஷ் நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “தங்கக் கடத்தல் விவகாரம் அனைத்தும் சிவசங்கரனுக்கு தெரியும். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது போல் பேசி வருகிறார். என்னைப் பலிகொடுத்து தப்பித்துவிடலாம் என்று சிலர் நினைத்தால்நான் அனுமதிக்க மாட்டேன்” என்றார்.