இந்தியா

யூஜிசியின் புதிய தலைவராக ஜேஎன்யூ துணைவேந்தர் ஜெக்தீஷ்குமார் நியமனம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்திய பல்கலைழக மானியக் குழுவின் (யூஜிசி) புதியத் தலைவராக, ஜவகர்லால் நேரூ பல்கலைழகத்தின் (ஜேஎன்யூ) பொறுப்பு துணைவேந்தரான எம்.ஜெக்தீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த யூஜிசி தலைவர் பதவியானது கடந்த டிசம்பர் முதல் காலியாக உள்ளது. இப்பதவியில் கடைசியாக பேராசிரியர் டி.பி.சிங் இருந்தார்.

நாட்டின் உயர் கல்வி நிறுவனங்கள், மத்திய, மாநிலங்களின் மற்றும் நிகர்நிலைப் பல்கலைழகங்களுக்கு நிதி உதவி அளித்து கண்காணிக்கும் பணியை செய்கிறது. இவை, புதிதாகத் துவக்கப்படும் இளநிலை முதல் முனைவர் பட்டம் வரையிலான அனைத்தின் பாடத்திட்டங்களுக்கும் யூஜிசியிடம் அனுமதி பெற வேண்டும்.

அதேபோல், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் யூஜிசிக்கு அதிகாரம் உள்ளது. எனவே, முக்கிய பதவியான இதற்கு ஜேஎன்யூவின் துணைவேந்தரான எம்.ஜெக்தீஷ்குமார் நேற்று மத்திய கல்வித்துறையால் அமர்த்தப்பட்டுள்ளார்.

இவர் குறைந்தது ஐந்து வருடங்கள் அல்லது அவருக்கு 65 வயது நிறைவடையும் வரையில் ஜெக்தீஷ்குமார் அப்பதவியில் நீட்டிப்பார் எனவும் மத்திய அரசின் உயர்கல்வித்துறை தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

டெல்லியிலுள்ள ஐஐடியின் எலக்ட்ரிக்கல் துறையின் பேராசிரியரான ஜெக்தீஷ்குமார், ஜேஎன் யூவின் துணைவேந்தராக தனது பதவிக் காலத்தை முடித்திருந்தார்.

எனினும், ஜேஎன்யூ பல்கலைகழகத்திற்கு புதிய துணைவேந்தர் இன்னும் அமர்த்தப்படவில்லை. இதனால், ஜெக்தீஷ்குமார் தனது பணி நிறைவிற்குப் பிறகும் பொறுப்பு துணைவேந்தராகத் தொடர்கிறார்.

டெல்லியின் முற்போக்கு மற்றும் சிவப்பு சிந்தனையாளார்களை உருவாக்குவதில் ஜேஎன்யூ பெயர் போனது. இதில் பயிலும் மாணவர்கள் மீது கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் தாக்கங்களும் ஏற்படுகிறது.

இச்சூழலில், அதன் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற பேராசிரியர் ஜெக்தீஷ்குமார், இட்ட பல புதிய உத்தரவுகள் சர்ச்சைக்குரியதாயின. பாஜகவின் இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பேராசிரியர் ஜெக்தீஷ்குமார் மீது புகார் எழுந்திருந்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT