இந்தியா

மத்திய அரசு முடிவு அசாதுதீன் ஒவைசிக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு காரில் டெல்லி திரும்பிக் கொண்டிருந்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கார் மீது 2 பேர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார் சேதமடைந்தது. வேறொரு காரில் ஏறி ஒவைசி டெல்லி சென்றார்.

இதையடுத்து ஒவைசிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினரைக் கொண்ட ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஆனால், ஒவைசிக்கு நெருக்கமான வட் டாரங்கள் கூறுகையில், ‘‘இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒவைசிக்கு எந்த தகவலும் வரவில்லை. எனினும், இசட் பிரிவு பாதுகாப்பை ஒவைசி ஏற்க மாட்டார் என்று தெரிகிறது’’ என்று கூறின. ஆனால், மக்களவையில் நேற்று ஒவைசி பேசுகையில், ‘‘எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம். நான் முதல் தரமான ‘ஏ’ பிரிவு குடிமகனாக இருக்க விரும்புகிறேன். என் கருத்துக்களை சொல்வதற்காக வாழ விரும்புகிறேன்’’ என்றார்.

2 பேர் கைது

கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நொய்டாவைச் சேர்ந்த சச்சின், சஹரான்பூரைச் சேர்ந்த ஷூபம் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT