இந்தியா

நாடாளுமன்றம் சுமுகமாக செயல்படும்: மோடி நம்பிக்கை

பிடிஐ

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது பகுதி சுமுகமாக செயல்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று கூறியதாவது: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தது. அந்த கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளித்தன. இதனால் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது அனைத்துக் கட்சி எம்பிக்களையும் மகிழ்ச்சியடையச் செய்தது.

இப்போது தொடங்கி உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது பகுதியிலும் அதே உற்சாகத்துடன் நாம் பிரச்சினைகள் குறித்து ஜனாநாயக மரபுப்படி விவாதித்து நல்ல முடிவுகளை எடுப்போம். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத் தொடரில் மக்களவையில் 13 மசோதாக்களையும் மாநிலங்களவையில் 11 மசோதாக்களையும் நிறைவேற்றுவதுடன் பல்வேறு அலுவல்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால் எதிர்பார்த்தபடி, உத்தராகண்ட், அருணாச்சல பிரதேச மாநிலங்களில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்திய மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி இன்று அமளியில் ஈடுபட்டது. இதற்கு இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் ஆதரவளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT