இந்தியா

பள்ளி, கல்லூரிகள் திறப்பு; 100% ஊழியர்களுக்கு அனுமதி: கரோனா பரவல் குறைந்ததால் டெல்லியில் தளர்வுகள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரோனா பரவல் குறைந்து வருவதால் டெல்லியில் வரும் திங்கள் கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும். அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும். உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்கலாம் என்றெல்லாம் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கரோனா பரவல் வேகமெடுத்தது. இதனையடுத்து டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு. பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் வகுப்பு. அரசு, தனியார் அலுவகலங்களில் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் வேலை என்று கெடுபிடிகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் ஒமைக்ரானால் ஏற்பட்ட மூன்றாவது அலையில் இந்தியாவில் தீவிர நோய் பாதிப்புகள், உயிரிழப்புகள் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும் உச்சம் தொட்ட பாதிப்பு சமீப நாட்களாக நாடு முழுவதுமே குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 1,49,394 பேருக்கு கரோனா உறுதியானது. மொத்த உயிரிழப்பு 5 லட்சத்தைக் கடந்தாலும் அன்றாடம் பாசிடிவிட்டி விகிதம் 9.2 சதவீதமாகக் குறைந்தது.

கடந்த ஜனவரி 21 ஆம் தேதியன்று 3,47,254 ஆக இருந்த அன்றாட தொற்று பிப்ரவரி 3 ஆம் தேதியன்று 1,72,433 ஆகக் குறைந்தது. இது அன்றாட பாதிப்பில் 50% சரிவு. அதேபோல் இதே காலக்கட்டத்தில், பாசிடிவிட்டி விகிதம் (100ல் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்ற விகிதம்) 39%ல் இருந்து 10.99% ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இது மேலும் குறைந்து 9.2% என்றளவில் உள்ளது. இவையெல்லாம் நாட்டில் கரோனா மூன்றாவது அலை அகல்வதைக் காட்டுவதாகவே உள்ளது.

அதேபோல், தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,668 பேருக்கு தொற்று உறுதியானது. 13 பேர் இறந்த நிலையில் அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 5%க்கும் கீழ் குறைந்து 4.3% என்றளவில் இருந்தது. கரோனா பாசிடிவிட்டி விகிதம் 5%க்கும் கீழ் இருப்பது நோய்ப் பரவலைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அடையாளமாக உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது.

இந்நிலையில், டெல்லி பேரிடர் மேலாண்மைக் குழு, துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.

அதன்படி,

* திங்கள்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கலாம்.
* கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்களையும் திறக்கலாம்.
* உடற்பயிற்சிக் கூடங்கள், ஸ்பா, நீச்சல் குளங்களைத் திறக்கலாம்.
* அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கலாம்.
* கார்களில் தனியாக பயணிப்போர் முகக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டத் தேவையில்லை.

இவ்வாறாக பல்வேறு தளர்வுகளையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 15 வயது முதல் 18 வயது உடையோருக்கு தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்துமாறும் ஆலோசனைக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT