கோரக்பூர்: உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடன் சென்றார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் முதல் இரு கட்டங்களுக்கு நடக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 38 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். துணை முதல்வர் கேசவ் பரிசாத் மவுரியா சிராத்து தொகுதியில் போட்டியிடுகிறார். முதலில் ஆதித்யநாத் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அயோத்தி அல்லது கோரக்பூர் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிடுவார் எனத் தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அவர் கோரக்பூரில் போட்டியிடுவார் என பின்னர் அறிவிக்கப்பட்டது.
ஆதித்யநாத் 5 முறை கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக இருந்தவர் என்பதால், அவரின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் தொகுதியாக இருக்க வேண்டும் இங்கு போட்டியிடுவதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடன் சென்றார். முன்னதாக கோரக்நாத் கோயிலில் யோகி ஆதித்யநாத் பிரார்த்தனை செய்தார்.
வேட்புமனுத் தாக்கல் செய்யும் முன்பாக நடந்த பேரணியில் யோகி ஆதித்யநாத் மற்றும் அமித் ஷா உரையாற்றினர். அப்போது பேசிய அமித் ஷா ‘‘உத்தரபிரதேசத்தை மாஃபியாக்களிடம் இருந்து யோகி ஆதித்யநாத் விடுவித்துள்ளார். இதனை நான் பெருமையுடன் கூற முடியும். 25 ஆண்டுகளுக்கு பிறகு யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சியை நிறுவியுள்ளார்’’ எனக் கூறினார்.
கோரக்பூரில் பீம் ஆர்மியின் சந்திரசேகர் ஆசாத் போட்டியிடுகிறார். யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.