புதுடெல்லி: நாட்டின் ஏற்றுமதியை 40 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை எட்ட வர்த்தகம், தொழில்நுட்பம், சுற்றுலா துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தூதர்கள், அதிகாரிகளுக்கு வெளியுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது.
நாட்டின் ஏற்றுமதியை வரும் மார்ச் மாதத்துக்குள் 40 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதை எட்டுவதற்கு வசதியாக, தனது அதிகாரிகள் மற்றும் தூதர்கள் மூன்றுவிஷயங்களில் (3டி) கவனம் செலுத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதாவது வர்த்தகம், தொழில்நுட்பம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் தூதர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இம்மூன்றில் கவனம் செலுத்தி செயல்பட்டதன் அடிப்படையில் அவர்களது பணி குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். வெளியுறவுத் துறையில் பணிபுரியும் அனைவரும் ஒரு குழுவாக செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் தூதர்களின் செயல் பாடு மதிப்பீடு செய்யப்படுவ தோடு அடுத்த ஆண்டுக்கான இலக்கும் நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்மூன்று காரணிகளில் கவனம் செலுத்தும் பொருட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் நியமனங்களிலும் மாறுதல்களை செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி அந்தந்த நாடுகளின் மொழி தெரிந்த அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல ஒரு நாட்டின் மொழியை நன்கு தெரிந்த அதிகாரிக்கு அவருக்கு தெரிந்த மொழி உள்ள நாட்டில் பணிபுரிய அனுமதிக்கப்படும்.
இதன் மூலம் உள்ளூர் அதிகாரிகளுடன் அவர்கள் சிறப்பாக பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் உறுதிபட நம்புகிறது. இதேபோல வரும் காலங்களில் ஒரு அதிகாரியின் திறன் மற்றும் அந்த நாட்டில் உள்ள வர்த்தக வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு பணி நியமனம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- பிடிஐ